புகார் அளித்த பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: கேரள பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை: மருத்துவ அறிக்கையில் தகவல்

பழநி: கேரள மாநிலம், கண்ணூரை சேர்ந்த 45 வயதான பெண், ஜூன் 19ம் தேதி கணவருடன் பழநி தனியார் லாட்ஜில் தங்கியதாகவும், அப்போது 3 பேர் கொண்ட கும்பல் தன்னை கடத்தி பலாத்காரம் செய்ததாகவும் புகார் தெரிவித்தார். தமிழக டிஜிபிக்கு வந்த வாட்ஸப் புகாரின் அடிப்படையில் கடந்த 3 நாட்களாக ஏடிஎஸ்பி சந்திரன், திண்டுக்கல் எஸ்பி ரவளிப்பிரியா திண்டுக்கல் மாவட்டம் பழநியில் விசாரணை நடத்தினர். பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக கடத்தல் – கூட்டு பாலியல் பலாத்காரம் என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் 2 தனிப்படையை சேர்ந்த சுமார் 15 போலீசார் ஏடிஎஸ்பி சந்திரன் தலைமையில் நேற்று விசாரணைக்காக கேரள மாநிலம் சென்றனர். பழநியில் உள்ள தனிப்படை போலீசார் அப்பெண்ணின் செல்போன், உடன் வந்த நபரின் செல்போன் விவரங்களை கொண்டு, அதில் வந்துள்ள அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பெண் கூறும் புகாரில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது.புகார் கூறிய பெண், கணவரை மர்மக்கும்பல் தாக்கி விட்டு, தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நடந்த விசாரணையில் புகார் கூறிய பெண்ணுடன் வந்தவரின் சகோதரி திண்டுக்கல்லில் வசிப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் இருவரும் கணவன், மனைவி இல்லையென்பது உறுதியாகி உள்ளது. மேலும், லாட்ஜில் குடிபோதையில் தகராறு செய்த இருவரையும் லாட்ஜின் உரிமையாளர் முத்து வெளியே அனுப்பி உள்ளார். லாட்ஜ் உரிமையாளரின் செல்போனிற்கு 3 முறை புதிய எண்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் கேரள போலீஸ் பேசுவதாகவும், பணம் தர வேண்டுமென மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக லாட்ஜின் உரிமையாளர் முத்து, பழநி போலீசில் புகார் அளித்துள்ளார். அழைப்பு வந்த செல்போன் எண்களை கொண்டு போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். இந்நிலையில், பழநியில் போலீஸ் டிஐஜி விஜயகுமாரி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘கேரள பெண் கூறியபடி தனியார் லாட்ஜில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. கேரள மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையில் கூட்டு பலாத்காரமே நடைபெறவில்லை என தெரியவந்துள்ளது. பெண்ணுடன் வந்தவரின் சகோதரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் கணவன், மனைவி இல்லையென தெரிகிறது. எங்களது தனிப்படை தற்போது விசாரணைக்காக கேரளா சென்றுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இது பொய் புகார் என்று கூற முடியாது. விசாரணையின் இறுதியில் அது தெரியவரும்’’ என்றார்.இந்நிலையில், கேரளா சென்றுள்ள தனிப்படை போலீசார், பழநி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா புகார் கூறி பெண்ணிடம் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினார். இதைப்போல், ஏடிஎஸ்பி சந்திரன், புகார் கூறி பெண்ணுடன் வந்த ஆண் நண்பரிடம் விசாரணை மேற்கொண்டார். இருவரிடமும் நேற்று பகல் 2 மணி முதல் இரவு 7 மணி தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். இதில், இருவரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக, புகார் அளித்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரிடமும் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து இருவரையும் பழநிக்கு அழைத்து வந்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது….

The post புகார் அளித்த பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை: கேரள பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை: மருத்துவ அறிக்கையில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: