வண்டிபாளையம் -ஆத்திகுப்பம் இடையே பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் மூழ்கியது; 10 கிராம மக்கள் கடும் அவதி

மரக்காணம்: மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் மூழ்கியதால் 10 கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலால் இப்பகுதியில் மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மரக்காணம் அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. முன்பெல்லாம் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் வந்தால் உடனடியாக அது வங்கக் கடலுக்கு சென்று விடும். ஆனால் தற்போது பக்கிங்காம் கால்வாயில் மரக்காணம் அருகே காக்காபாளையம் -முதலியார்பேட்டை கிராமங்களுக்கு இடையில் ரூ.161 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் பக்கிங்காம் கால்வாயின் தெற்கு பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதுபோல் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் உப்புநீர் குறைந்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் தற்போது தண்ணீர் உள்ளது.  இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுபோல் தேக்கி வைக்கப்படும் பகுதியில் தான் ஆத்திகுப்பம் -வண்டிபாளையம் கிராமங்களுக்கு இடையிலான தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் தற்போது அதிகரித்து வரும் வெள்ளத்தால் மூழ்கிவிட்டது. இதன் காரணமாக வண்டிப்பாளையம், தேவிகுளம், நடுக்குப்பம், அட்சல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தரைப்பாலம் மூழ்கிவிட்டதால் பொதுமக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் மரக்காணம் வழியாக சுற்றிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மரங்கள் முறிந்து விழுந்தன: புயல் கரையை கடந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் மட்டும் வீடுகள் சேதமடைந்தும், 13 இடங்களில் மரங்கள் முறிந்து பாதிப்புகள் ஏற்பட்டன. மற்ற பகுதிகளில் மிதமான மழையோடு புயல் பாதிப்பு ஏதும் இல்லை. இதற்கிடையே, முறிந்து விழுந்த மரங்களை மீட்புக்குழுவினர் உடனடியாக அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். அதேபோல், திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அதுவும், நேற்று காலை வழக்கம்போல் மின் விநியோகம்  வழங்கப்பட்டது.கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் உட்புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. தாழங்குடா, சோனங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கடலரிப்பு ஏற்பட்டது. சோனங்குப்பம் பகுதியில் கடல் நீர் உட்புகுந்ததால் மீனவர்கள் தங்கள் வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வைத்தனர். குண்டு உப்பலவாடி, பாரதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகத்தால் முறிந்து விழுந்த மரங்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக அகற்றினர். …

The post வண்டிபாளையம் -ஆத்திகுப்பம் இடையே பக்கிங்காம் கால்வாய் தரைப்பாலம் மூழ்கியது; 10 கிராம மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: