ஷாருக்கான் மகன் கைது குறித்து விமர்சனம்: ‘சரக்கு’ அடிச்சால் அழிவுதான் ஏற்படும்!: போதை பழக்கத்தில் இருந்து மீண்ட நடிகை கருத்து

மும்பை: ஷாருக்கான் மகன் கைதுக்கு மத்தியில், மது குடிப்பதால் அழிவுதான் ஏற்படுகிறது என்று போதை பழக்கத்தில் இருந்து மீண்ட நடிகை பூஜா பட் கருத்து தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட  பின்னர், பாலிவுட்டுக்கும் போதைப் பொருளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இருப்பது  குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டாக மது குடிப்பதில்லை என்று சமீபத்தில் தெரிவித்த பாலிவுட் நடிகை பூஜா பட், தற்போது மது குடிப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்து புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஆல்கஹால் (மது) என்பது ஒரு மருந்து. ஆனால், இதனை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய பட்டியலில் வகைப்படுத்தப்படவில்லை. மதுவை குடிப்பதால் அழிவுதான் ஏற்படுகிறது. சாலை விபத்துக்கள், வீட்டு வன்முறை, கடனாளியாகுதல், குடும்பங்கள் பாதிப்பு, குழந்தைகளின் எதிர்காலம் பாதிப்பு, உயிரிழப்பு ஆகியன ஏற்படுகின்றன.

எனவே, மது பழக்கம் உடையவர்கள் தாங்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வில் கவனம் செலுத்த வேண்டும். மது குடிக்கும் குற்றவாளியாக இருக்கக்கூடாது’ என்று தெரிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் பூஜா பட்டின் கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், ‘மது குடிப்பதால் தங்கள் பிரச்னைகளும், கவலைகளும் தீரும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்; ஆனால் அதிக சிரமங்களையும், தொல்லைகளையும் சந்திக்க நேரிடும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

மற்றொருவர், ‘மது பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யாமல் அவர்களை குற்றவாளியாக பார்ப்பது சரியல்ல. இதில் வேடிக்கை என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது போதைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருள் மோசடி செய்பவர்களுக்கு சமமாக தண்டிக்கப்படுவார்கள். போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் உள்ள குறைபாடுகளை திருத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: