கொருக்குப்பேட்டை, கொடுங்கையூரில் ரூ.106 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பால பணி: எம்பி தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: கொடுங்கையூர் எழில் நகர்,  கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் ஆகிய பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்  மூடப்படுவதால் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால்  மேற்கண்ட பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் கட்டி தரவேண்டும் என அப்பகுதி  மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரயில்வே மேம்பாலம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை  மேற்கொள்ளும்படி வலியுறுத்தினார். பின்னர் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் தொடர் முயற்சிக்கு பிறகு, எழில் நகர் பகுதியில் எல்.சி-2 என்னும்  ரயில்வே கேட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரயில்வே துறை ஒப்புதல்  அளித்தது. முதல்கட்டமாக எழில் நகரில் ரயில்வே துறை  சார்பில் ₹10 கோடி மதிப்பிலான மேம்பால பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா  மற்றும் பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சென்னை வடக்கு  மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் முன்னிலை வகித்தனர். வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி  பங்கேற்று, புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,  ‘‘கொடுங்கையூர் மற்றும் கொருக்குப்பேட்டையில் ₹106 கோடி மதிப்பில் புதிய  ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற உள்ளது. தற்போது முதல்கட்டமாக ரயில்வே துறை  சார்பில் ₹10 கோடி மதிப்பிலான பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. பின்னர் சென்னை  மாநகராட்சி சார்பில் ₹96 கோடி ஒதுக்கப்பட்டு, மேம்பாலப் பணிகள் முழுவதுமாக  நிறைவு பெறும்’’ என்றார். நிகழ்ச்சியில் பகுதி திமுக செயலாளர்கள் ஜெபதாஸ்  பாண்டியன், லட்சுமணன், மண்டல குழுத் தலைவர் நேதாஜி கணேசன், மாவட்ட  வழக்கறிஞரணி அமைப்பாளர் மருது கணேஷ், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர்  சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post கொருக்குப்பேட்டை, கொடுங்கையூரில் ரூ.106 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பால பணி: எம்பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: