சுகமான வாழ்வருளும் சௌமியநாராயணன்

(திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு 27.3.2023 திங்கள்கிழமை)

திருக்கோட்டியூரில் அருள் புரிகின்ற பெருமாளை, பெரியாழ்வார், ‘‘நரக நாசன்’’ என்று அழைக்கின்றார். இதோ அந்த பாசுரம்.

உரக மெல்லணையான் கையில் உறை சங்கம் போல் மடவன்னங்கள்

நிரை கணம் பரந்தேறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர்

நரக நாசனை நாவில் கொண்டு அழையாத மானிட சாதியர்

பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம் கொலோ.

யாரெல்லாம் இந்தப் பெருமாளை வணங்குகின்றார்களோ அவர்களுக்கு நரகவாசம் இல்லாமல் செய்பவன் என்ற பொருளில் இப்பெருமானை அழைக்கின்றார் ஆழ்வார். திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில், சிவகங்கை மாவட்டத்தின், திருப்பத்தூர் வட்டத்தில் திருக்கோஷ்டியூர் தலத்தில் அமைந்த 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. மதுரையிலிருந்து, 65 கி.மீ. தொலை விலும், சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் உள்ள தலம் இது. போக்குவரத்து வசதிகள் உண்டு.

இத்திருக்கோயில் அஷ்டாங்க விமானத்தோடு கூடிய அற்புதமான கோயில். வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு இந்த கோயிலில் உண்டு. அஷ்டாங்க விமானத்தின் கீழ்த் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோகப் பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சௌமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோகப் பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். இங்குள்ள மகாமக கிணறு அவசியம் தரிசிக்க வேண்டியது.

புருரூப சக்கரவர்த்தி இத்தலத்தைத் திருப்பணி செய்தபோது மகாமகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளைத் தரிசிக்க விரும்பினார் புருரூவன். அவருக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சிதந்தார். பிராகாரத்தில் உள்ள இந்தக் கிணற்றை ‘‘மகாமக கிணறு’’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.

கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் காட்சியளிக்கிறார். உரக உரக மெல்லணையான் என்று அருமையான தமிழ்ப் பெயர். உரகம் என்றால் பாம்பு என்று அர்த்தம். மென்மையான பாம்புப் படுக்கையில் துயில் கொண்டு அருள்பவர். மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சந்நதி இருக்கிறது.

சயனகோலத்தில் பெருமாள் இருந்தாலும், வலது கையால் ஆதிசேஷனுக்கு அபயம் அளிப்பார். மேல் மாடிக்கு குறுகலான பாதையில் சென்றால், அங்கே ஸ்ரீராமானுஜர் “ஆசையுடையவர்களை எல்லாம் அழைத்து” திருமந்திர ரகசியத்தை வெளியிட்ட இடத்தைத் தரிசனம் செய்யலாம். ஸ்ரீராமானுஜரின் ஐந்து குருமார்களில் ஒருவரான திருக்கோஷ்டியூர் நம்பியின் அவதாரத்தலம் இது.

அசுரர்கள் இந்த உலகத்தை ஆக்கிரமித்து தேவர்களை விரட்டினர். அவர்களிடம் போரிட முடியாமல் தேவர்களெல்லாம் பல்வேறு இடங்களில் ஒளிந்து இருந்தனர். அசுரர்களை எப்படி அழிப்பது என்பதை ஆலோசிப்பதற்காக, அசுரர்கள் ஒரு சாபத்தால் வரமுடியாத இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கூடி எம்பெருமான் ஸ்ரீமன்நாராயணனை பிரார்த்தனை செய்தனர். அப்படி தேவர்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடிய இடம் என்பதால் இதற்கு கோஷ்டியூர் என்று பெயர். இந்த இடத்தின் சிறப்பை தெரிவிக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு சம்பவத்தைச்

சொன்னால் போதும்.

இங்கே செல்வநம்பி என்று ஒருவர் இருந்தார். அவரை பெரியாழ்வாரின் குரு என்று சொல்வார்கள். மிகச் சிறந்த வைணவர். எல்லோரிடமும் அன்புகொண்டவர். அடியார்கள் யார் வந்தாலும் அவர்களுக்கு அன்புடன் விருந்தோம்பல் செய்வதில் அவருக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. அவருடைய மனைவி அவரைவிட சிறப்பாக விருந்தோம்பல் செய்வார். ஒருமுறை செல்வநம்பி வெளியூர் சென்றுவிட்டார். அப்பொழுது சில வைணவ அடியார்கள் திவ்யதேச யாத்திரையாக திருக்கோஷ்டியூர் வந்தனர். அப்பொழுதெல்லாம் விலைக்கு உணவு தரும் உணவுக் கடைகள் இல்லை. யாராவது அவர்களுக்கு உணவு அளித்தால்தான் உண்டு. செல்வநம்பியின் வீட்டைத் தேடி பசியோடு வந்தனர்.

செல்வ நம்பி ஊரில் இல்லாததால், அவருடைய மனைவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வீட்டில் அரிசி இல்லை. ஆனால், விதைப்பதற்காக விதைநெல் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. விதை நெல்லை எடுத்து சில ஆட்களை வைத்து குத்தி அரிசி எடுத்து அந்த அரிசியை உணவாகப் பக்குவப்படுத்தி எல்லா அடியார்களுக்கும் மகிழ்வோடு பரிமாறினார். அவர்களும் மனமும் வயிறும் நிறைந்து வாழ்த்தி விட்டுச் சென்றனர். அடுத்த நாள் செல்வநம்பி வந்தார். வெளியில் அடுக்கி வைத்திருந்த விதை நெல் மூட்டைகளைக் காணவில்லை. மனைவியிடம் கேட்டார்.

‘‘விதை நெல்லைக் காணவில்லையே, என்ன செய்தாய்?”. அந்த அம்மையார் மென்மையான புன்னகையுடன்,

‘‘எல்லாவற்றையும் விதைத்துவிட்டேன்’’

 என்றார்.

‘‘விதைத்துவிட்டாயா? எங்கே? ஆட்கள் கிடைத்தார்களா? எப்படி நீ தனி ஆளாக விதைத்தாய்?’’ அந்த அம்மையார் சொன்னார்,

‘‘அதை நம்முடைய நிலங்களில் விதைக்கவில்லை?’’

‘‘பின் எங்கே விதைத்தாய்?’’ என்று செல்வநம்பி கேட்க,

‘‘பரமபதத்தில் விதைத்தேன்’’ என்று அந்த அம்மையார் பதில் சொன்னார்.

விருந்தோம்பலிலும், வேதம் ஓதுவதிலும், பக்தியிலும் சிறந்தவர்கள் தொண்டு புரியும் அந்த திருக்கோட்டியூர் பெருமானுக்கு மகா குடமுழுக்கு வைபவம் 27.3.2023 திங்கட்கிழமை காலை 9.38 மணி முதல் 10.32-க்குள் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு எம்பெருமானின் திருவருளைப் பெறுவோம்.

முனைவர் ஸ்ரீராம்

Related Stories: