அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

512. ஸத்யஸந்தாய நமஹ (Sathya-Sandhaaya namaha)

(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை - தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)ராவணன் சீதையை அபகரித்துச் சென்றவாறே, சீதையைத் தேடிக் கொண்டு ராமனும், லட்சுமணனும் சென்றார்கள். வழியிலே ராவணனால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அடிபட்டுக் கிடந்த ஜடாயுவைக் கண்டார்கள். ஜடாயு ராமனைப் பார்த்து, ``ராமா, நான் ஒரு அதிர்ச்சிச் செய்தியைச் சொல்லப் போகிறேன், நீ பல்லாண்டு வாழ்க’’ என்று ராமனை வாழ்த்தி விட்டுப் பேசத் தொடங்கினார்.

யாம் ஓஷதீம் இவ ஆயுஷ்மன் அன்வேஷஸி மஹாவனே
ஸா தேவீ மம ச ப்ராணா ராவணேன உபயம் ஹ்ருதம்

என்று ரத்தினச் சுருக்கமாக அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டார் ஜடாயு. ``ராமா, எந்த சீதையைத் தேடிக் கொண்டு நீ இங்கே அலைகிறாயோ, அந்த சீதையையும் எனது உயிரையும் ராவணன் கொண்டு சென்றுவிட்டான்’’ என்றார். சொல்ல வந்த செய்தியை இதை விடச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்ல முடியுமா? அத்துடன் நில்லாமல் ராமனுக்கு ஆறுதல் வார்த்தையும் சொன்னார் ஜடாயு.

விந்தோ நாம முஹூர்த்தோஸௌ ஸ ச காகுத்ஸ்த நாபுதத்

``ராமா, ராவணன் சீதையை அபகரித்த நேரம் விந்தம் என்று அழைக்கப்படும் முகூர்த்தம் ஆகும். அந்தச் சமயத்தில் எந்தப் பொருள் பறிபோனாலும் போனபடி அப்படியே திரும்ப வந்துவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். எனவே சீதையும் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் உன்னிடம் திரும்ப வந்துவிடுவாள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு உயிர் நீத்தார் ஜடாயு.

ஆஹா, நாட்டில் ஒரு தந்தை என்னைப் பிரிந்த துயரால் இறந்தார். காட்டில் கிடைத்த இந்தத் தந்தையும் எனக்கு உதவி செய்யப் போய் உயிர் நீத்து விட்டாரே என்று பலவாறு வருந்தினான் ராமன். அதன்பின், தசரதனுக்குத்தான் நேரடியாக ஈமக்கிரியை செய்ய முடியாத குறை தீர, ஜடாயுவைத் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து ஈமக் கிரியை செய்ய முடிவெடுத்தான் ராமன். அப்போது ஜடாயுவைப் பார்த்து, ``மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான்’’ `நான் சொல்கிறேன், ஜடாயுவே, நீங்கள் வைகுண்ட லோகத்தைச் சென்று அடைவீராக’ என்றான் ராமன். அடுத்த நொடியே, ஜடாயுவின் உடலில் இருந்த ஜீவாத்மா புறப்பட்டு வைகுண்ட லோகத்தை அடைந்துவிட்டது. இதைக் கீழத் திருப்பதியில் புளியமரத்தடியில் அமர்ந்தபடி திருமலை நம்பிகள் ராமானுஜருக்கு விளக்கியபோது, அனைத்தும் அறிந்த ராமானுஜர், ஆசார்யன் வாயால் ரகசியத்தைப் பெறுவதற்காக ஒரு கேள்வி கேட்டார்.

ராமன், தனது இறைத் தன்மையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனிதனாகத் தானே தன்னைப் பாவித்துக் கொள்வான். அந்த ராமன் எப்படித் தன் வாயால் ஜடாயுவை வைகுண்டம் போகுமாறு ஏவினான் என்பதைச் சற்றே விளக்க வேண்டும் என்று கேட்டார் ராமானுஜர்.அதற்குத் திருமலை நம்பிகள், ராமன் தனது இறைத் தன்மையை வெளிப்படுத்தாமல் தசரதன் மகனாக இருந்துகொண்டே ஜடாயுவுக்கு முக்தி அளித்துவிட்டான் என்றார்.

அது எப்படி என்று ராமானுஜர் வினவ, ``ஸத்யேன லோகான் ஜயதி’’ என்ற வால்மீகியின் வரிகளை மேற்கோள் காட்டிய திருமலை நம்பிகள், தனது சத்தியத்தால் அனைத்து உலகங்களையும் வென்றிருந்தான் ராமன். யார் ஒருவன் சத்தியத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனுக்கு அனைத்து உலகங்களும் கட்டுப்படும். சத்தியசந்தனான ஒரு நபர் ஒரு வார்த்தை சொன்னால், பரமனும் பஞ்ச பூதங்களும் அனைத்து உலகங்களும் சேர்ந்து அதை மெய்ப்பித்து விடுவார்கள். எனவே சத்தியசந்தனான ராமன் ஜடாயுவைப் பார்த்து, ``நீ வைகுண்டம் போ’’ என்றவாறே, வைகுண்டத்துக்கு வழியான அர்ச்சிராதி மார்க்கம், தானே வழிவிட்டது.

வைகுண்டநாதன் ஜடாயுவை வரவேற்றார். வைகுண்டத்தை அடைந்துவிட்டார் ஜடாயு என்று விளக்கினார். வடமொழியில் `ஸந்தா’ என்றால் உறுதிமொழி என்று பொருள். தான் அளிக்கும் ஸந்தா என்னும் உறுதிமொழிகள் அனைத்தையும் சத்தியமாக ஆக்குவதால் - மெய்ப்பித்துக் காட்டுவதால், உறுதிமொழிகளை மெய்ப்பித்துக் காட்டுபவர் - ஸத்யஸந்த என்று ராமன் அழைக்கப்படுகிறார்.

ஜடாயுவைப் பார்த்து, ``வைகுண்டம் போ..’’ என்றான் ராமன். தான் அதுவரை கடைபிடித்த சத்தியத்தாலேயே அந்த வாக்கை மெய்ப்பித்துக் காட்டவும் செய்தான். `ஸத்யஸந்த’ என்றால் உறுதிமொழிகளை மெய்ப்பித்துக் காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 512-வது திருநாமம். ``ஸத்யஸந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சத்தியத்தில் இருந்து விலகாதிருக்கும் படி ஸ்ரீராமன் காத்தருள்வார்.

513. தாசார்ஹாய நமஹ (Dhaashaarhaaya namaha)

நாரதர் பூமியில் இருந்து மூன்று மன்னர்களை அழைத்துக் கொண்டு தேவலோகத்துக்குள் நுழைந்தார். ``நாராயண... நாராயண...’’ என்ற நாரதரின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் இந்திரன். அவருடன் வந்திருக்கும் மூன்று மன்னர்களைக் கவனித்தான். யார் இவர்கள் என்று நாரதரிடம் வினவினான். நாரதர், ``இந்திரா உன்னோடு சேர்ந்து இந்திர லோகத்தில் மகிழ்ந்திருக்க விரும்பி இந்த மூன்று மன்னர்கள் வந்திருக்கிறார்கள். சுவர்க்கத்தை அடைய விரும்பிப் பூமியிலே பற்பல தானங்கள் எல்லாம் செய்த கொடை வள்ளல்கள் இம்மூவரும் என்றார். அவர்களுக்குத் தன் உலகில் இடம் கொடுக்க இந்திரனுக்கு மனமில்லை. அதனால் இந்திரன் நாரதரிடம், ``நாரதரே, நம் சுவர்க்க லோகத்தில் மூவருக்கு இடமில்லை.

யாராவது ஒருவரைப் பூமிக்கு அனுப்பி வைத்து விடுங்கள் என்றான். யாரை அனுப்புவது என்று கேட்டார் நாரதர். அதற்கு இந்திரன், ``அந்த மூன்றாவது மன்னன் இருக்கிறானே, அவனிடம் நானே ஓர் ஏழை வடிவில் தானம் வாங்கப் போயிருந்தேன். அவனது தங்க ரதத்தை எனக்குத் தானமாக வழங்குமாறு வேண்டினேன். ஆனால், தங்கரதம் தராமல் மரத்தால் ஆன ரதத்தைத் தான் தந்தான். இரண்டாம் முறை சென்று கேட்டேன், சந்தன மர ரதத்தைத் தந்தான்.

மூன்றாம் முறை சென்று கேட்டேன், தேக்கு மர ரதம் தந்தான். கடைசி வரை தங்க ரதம் தரவே இல்லை. அவனைப் பூமிக்கு அனுப்புங்கள் என்றான். நாரதரும் அவனை அனுப்பி வைத்தார். ``இந்த இருவரையும் உள்ளே அனுமதிக்கலாமா’’? என்று கேட்டார் நாரதர். அதற்கு இந்திரன், ``இருங்கள் நாரதரே, அந்த இரண்டாவது மன்னன் இருக்கிறானே, அவன் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பயணித்த போது, நான் மாறுவேடத்தில் எதிரே சென்று, ஒரு குதிரையை எனக்குத் தானம் தருமாறு கேட்டான், அவனும் தந்தான்.

இரண்டாம் குதிரையைக் கேட்டேன், அதையும் தந்தான். மூன்றாம் குதிரையையும் கேட்டபோது, அதையும் கூடத் தந்தான். ஆனால், நான்காம் குதிரையைக் கேட்டபோது, அதை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய், நான் தேரில் பயணிக்க ஒரு குதிரையாவது வேண்டும் என்று சொல்லி விட்டான். நான்குக்கு மூன்று தந்த இவனை இங்கே சேர்க்க மாட்டேன். அவர் பூமிக்குச் செல்லட்டும் என்றான் இந்திரன். அவரும் பூமிக்கு வந்தார்.

மீதமுள்ள ஒரு மன்னரையாவது உள்ளே அழைத்துக் கொள்வான் இந்திரன் என்று எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், இந்திரன், ``இந்த மன்னனிடம் முன்னொரு சமயம் நான் மாறு வேடத்தில் கோதானம் வாங்கப் போனேன். நூறு பசுக்களை அவன் தானம் செய்தான். தானம் செய்துவிட்டு, நான் நூறு பசுக்களைத் தானம் செய்தேன் என்று தன் நண்பனிடம் சொன்னான். இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டால், அதன்பின் அப்பொருள் நமது அன்று. ஆனால், நான் கொடுத்தேன் என்று தானம் செய்த பின், ஒருவன் சொல்கிறான் என்றால் அது தோஷமுள்ள தானம். அவனுக்கும் சுவர்க்கத்தில் இடமில்லை, போகலாம் என்று சொல்லிவிட்டான்.

மூன்று மன்னர்களும் பூமிக்கு வந்துவிட்டார்கள். நாரதர் அவர்களைத் தேடி வர, தங்களது மனவருத்தத்தை நாரதரிடம் சொல்லி அழுதார்கள். நாரதரோ, ``மன்னர்களே, இந்திரனின் மனம் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு உணர்த்தவே நான் உங்களைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றேன். நீங்கள் நூறு நல்லது செய்தாலும் அதில் உள்ள தோஷத்தைத் தான் பார்ப்பான் இந்திரன். ஆனால் நீங்கள் ஆயிரம் தவறுகள் செய்தாலும், அதிலும் ஒரு நல்லதைப் பார்க்கும் ஒருவன் இருக்கிறான் என்றார் நாரதர். யார் அவன் என்று மன்னர்கள் கேட்க, அவர்களை ஆயர்ப்பாடிக்கு அழைத்துச் சென்றார் நாரதர். ஆயர்ப்பாடியில் ஒரு சடலம் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து அகர் வாசனை எழுந்தது.

மூன்று மன்னர்களும் நாரதரிடம், ``யோகிகளின் உடலை எரித்தால் தானே இத்தகைய வாசனை வரும், யோகி யாராவது மரணம் அடைந்திருக்கிறாரா’’? என்று கேட்டார்கள். அதற்கு நாரதர், ``யோகியும் இல்லை, முனிவரும் இல்லை, பூதனை என்ற பேய்யின் சடலத்தை எரிக்கிறார்கள். அதிலிருந்து அகர்வாசனை வருகிறது என்றார். ``அது எப்படிச் சாத்தியம்?’’ என்று மன்னர்கள் கேட்டார்கள்.

பூதனை கண்ணனுக்கென்றே விஷப்பால் சமர்ப்பித்தாள் அல்லவா, அந்த விஷப்பாலையே தனக்குச் சமர்ப்பித்த காணிக்கையாகக் கருணையுடன் கண்ணன் ஏற்றுக் கொண்டான். அவளுக்கு முக்தி அளித்துவிட்டான். அதனால்தான், அவளது சடலம் மணக்கிறது என்றார் நாரதர். அப்படியானால் இவன், தான் குற்றம் காணாமல் குணத்தைக் கொள்பவன் என்று அறிந்து கண்ணனின் திருவடிகளைப் பற்றி மூன்று மன்னர்களும் வைகுண்டமாகிய முக்தியையே பெற்றுவிட்டார்களாம்.

நாம் என்ன சமர்ப்பித்தாலும், அதை எளிமையோடும் கருணையோடும் குற்றம் காணாமல் யார் ஒருவர் ஏற்றுக் கொள்கிறாரோ, அவருக்குத் தானே நாம் பரிசுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவேதான் திருமால் ``தாசார்ஹ’’ என்று அழைக்கப்படுகிறார். `தாச’ என்பது நாம் காணிக்கையாக்கும் பரிசுகளைக் குறிக்கிறது. அதை எளிமையோடு ஏற்பதால், காணிக்கைகளைப் பெறுவதற்குத் தகுதியானவர் - தாசார்ஹ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 513-வது திருநாமம்.``தாசார்ஹாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், சமர்ப்பிக்கும் அனைத்துக் காணிக்கைகளையும் திருமால் மகிழ்ச்சியோடு ஏற்று அருள்புரிவார்.

514. ஸாத்வதாம் பத்யை நமஹ (Saathvathaam Pathyai namaha)

திருநெல்வேலியில் இருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் சங்காணி என்ற ஊர் உள்ளது. அங்கே வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. தென்காஞ்சி என்றே அந்தக் கோயில் வழங்கப் படுகிறது. நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த காலத்தில், நாயக்க மன்னர் வரதராஜர் கோயில் அர்ச்சகருக்கு ஓர் ஓலை அனுப்பி வைத்தார். வரதராஜப் பெருமாளைத் தரிசிப்பதற்காகத் திருக்கோயிலுக்கு மன்னர் வர உள்ளதாக அந்த ஓலையிலே எழுதப் பட்டிருந்தது. அதைக் கண்ட அர்ச்சகர், மறுநாள் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். மன்னருக்கு வழங்குவதற்குரிய பிரசாதங்களைத் தயாரிக்கப் பொருள்களை வாங்கினார்.

பெரிய பூமாலைகள் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க ஆவன செய்தார்.மாலைப் பொழுது வந்தது, அர்ச்சகருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காய்ச்சலோடேயே அர்த்த ஜாம பூஜையைச் செய்துவிட்டு வீடு திரும்பினார் அர்ச்சகர். கடும் உடல் வலியாலும் காய்ச்சலாலும் துன்புற்ற அவர், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகி, வரதராஜா நாளை மன்னர் கோயிலுக்கு வர உள்ளார்.

நான் காய்ச்சல் என்ற காரணத்தால் நாளை வராமல் இருந்தால், நான் தினந்தோறுமே பூஜை செய்யவில்லையோ என்று மன்னர் சந்தேகப்பட வாய்ப்புள்ளது. பகவானே, நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டியபடியே அசந்து உறங்கிவிட்டார்.

உறங்கிய அர்ச்சகர், அடுத்த நாள் மாலைதான் கண் விழித்தார். மாலைப் பொழுது வந்ததை அறிந்து அலறி அடித்துக் கொண்டு கோயிலை நோக்கி ஓடினார் அர்ச்சகர். திருக்கோயிலிலே மக்கள் கூடி இருப்பதைக் கண்டார் அர்ச்சகர். மன்னர் வந்து விட்டாரா என்று விசாரித்தார் அர்ச்சகர். என்ன இப்படிக் கேட்கிறீர்கள், காலையில் மன்னர் வந்த போது நீங்கள் தானே அவரை முறைப்படி வரவேற்று, அவருக்குப் பெருமாளின் ஆள் உயர மாலையைச் சாற்றி, பெருமாளின் சிறப்புப் பிரசாதங்களை எல்லாம் வழங்கி, நன்கு கௌரவித்து அனுப்பி வைத்தீர்கள் என்றார்கள்.

இதோ மன்னர்கூட உங்களுக்கு வழங்கச் சொல்லி ஒரு பெட்டி நிறைய தங்கக் காசுகளை வைத்து விட்டுப் போயிருக்கிறார் பாருங்கள் என்று ஒரு பெட்டியையும் மக்கள் காட்டினார்கள். நாம் கோயிலுக்கே வராமல் எப்படி மன்னருக்கு இத்தனை மரியாதைகள் நடைபெற்றன என்று சிந்தித்தார். இந்தச் சிந்தனையோடு நீராடி விட்டு, தமது அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, மாலை பூஜைகளைச் செய்யத் திருக்கோயிலுக்குள்ளே சென்றார் அர்ச்சகர்.

வரதராஜப்பெருமாள் அர்ச்ச கரைப் பார்த்து, ``காய்ச்சல் குணமாகி விட்டதா?’’ என்று கேட்டார். அப்போதுதான் தனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது என்ற நினைவே அர்ச்சகருக்கு வந்தது. ``ஆஹா, என் நோயைப் போக்கியதோடு இல்லாமல் நோயைப் பற்றிய எண்ணத்தையே பகவான் போக்கிவிட்டானே!’’ என்று அப்போதுதான் உணர்ந்தார் அர்ச்சகர்.

வரதராஜப் பெருமாள், ``அர்ச்சகரே, காய்ச்சலோடு நீங்கள் ஏன் சிரமப் பட வேண்டும் என்று கருதி உங்களைப் பகல் முழுவதும் ஓய்வெடுக்க வைத்தேன். உங்கள் வடிவில் நானே வந்து மன்னருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து முடித்துவிட்டேன் என்று கூறினார். ``பகவானே, எனக்காக நீ இத்தனையும் செய்ய வேண்டுமா?’’ என்று கேட்டார் அர்ச்சகர். ``என்னை அண்டி இருப்போருக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்’’ என்று கேட்டார் வரதராஜப் பெருமாள். ``இந்தப் பெட்டி நிறைய மன்னர் தந்த தங்க நாணயங்கள் உள்ளன, அவை என் பரிசாக உங்களுக்கு வந்தன என்று கருதி நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றும் கூறினாராம் பெருமாள்.

இப்படித் தன்னை அண்டியிருக்கும் அடியார்களுக்குத் தலைவனாக இருந்து அவர்களைக் காப்பதால், திருமால் ஸாத்வதாம்பதி என்று அழைக்கப்படுகிறார். ஸாத்வதர் என்ற சொல், சத்துவ குணமே வடிவெடுத்த திருமால் அடியார் களைக் குறிக்கிறது. அந்த ஸாத்வதர்களுக்குப் பதியாக - தலைவனாக இருப்பதால், திருமால் ஸாத்வதாம்பதி என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 514-வது திருநாமம்.``ஸாத்வதாம் பத்யை நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஆபத்பாந்தவராக இருந்து திருமால் காத்தருள்வார்.

515. ஜீவாய நமஹ(Jeevaaya namaha)

பூமியில் கலியுகம் தொடங்கிய வேளையில், மகாலட்சுமித் தாயார் திருமாலிடம், ``சுவாமி, பார்த்தீர்களா, பூமியில் கலியுகம் தொடங்கி விட்டது. மூன்று வித தாபங்களால் நம் குழந்தைகள் துன்புறுகிறார்கள். ஆத்யாத்மிகம் எனப்படும் உடல்ரீதியாக வரும் நோய்கள் போன்ற துன்பங்கள், ஆதிபௌதிகம் எனப்படும் மற்ற உயிர்களால் வரும் துன்பங்கள், ஆதிதைவிகம் எனப்படும் இயற்கைச் சீற்றங்களால் வரும் துன்பங்கள் என மூன்றும் சுட்டெரிக்கத் துன்புறும் நம் குழந்தைகளை உங்களை விட்டால் வேறு யார் காப்பார்கள்”? என்று கேட்டாள்.

அதற்குத் திருமால், ``நான் காப்பதற்குத் தயாராக இருக்கிறேனே. ஆனால், என்னைத் தியானிக்கச் சொல். என்னைக் குறித்துத் தவம் புரியச் சொல். நானே கதி என்று என்னைச் சரண் அடையச் சொல். வைகுண்டத்துக்கு வர முடியாவிட்டால், பாற்கடலுக்கு வந்து என்னைத் தரிசிக்கட்டும், அல்லது அவரவர் உள்ளங்களிலேயே நான் இருக்கிறேனே, அங்கிருக்கும் என்னை வழிபடட்டும், காக்கிறேன்’’ என்று பதிலளித்தார்.திருமகளோ, ``சுவாமி, கலியுகத்தில் வாழும் மனிதர்களுக்குப் பக்தி, ஞானம், இறைநம்பிக்கை, தவம் அனைத்துமே குறைவு.

 அவர்கள் வைகுண்டத்தையும் பாற்கடலையும் நம்புவார்களா என்றே சொல்ல முடியாது. மேலும், இதயத்துக்குள் நீங்கள் இருந்தாலும், உங்களைக் காணவல்ல யோகசக்தி அவர்களிடம் இல்லையே என்றாள். நான் என்ன செய்ய வேண்டும் என்று திருமால் கேட்க, திருமகள், ``நீங்கள் விக்கிரக வடிவில் திருக்கோயில்களிலே எழுந்தருள வேண்டும். அதுதான் கலியுகத்தில் உள்ள மக்களைக் காக்க ஒரே வழி’’ என்று கூறினாள். நம்மைக் காக்க எப்படித் திருமால் ராமனாகவும், கண்ணனாகவும், நரசிம்மனாகவும் அவதாரம் செய்தாரோ, அதுபோல், கலியுகத்தில் மூவகை வெப்பங்களில் இருந்தும் நம்மைக் காக்கும் பொருட்டு, திருவரங்கநாதனாக, திருமலையப்பனாக, காஞ்சி வரதராஜனாக இப்படிப் பல வடிவங்களில் கோயில் கொள்வது என்று முடிவெடுத்தார் திருமால்.

முடிவெடுத்தபின் திருமகளிடம் திருமால், ``தேவி, இப்போது பிருகு முனிவர் வந்து கொண்டிருக்கிறார். என் லீலைக்குக் கொஞ்சம் நீயும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். அப்படியே ஆகட்டும் என்றாள் திருமகள். மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைக்க நினைத்த பிருகு முனிவர், திருமாலின் திருமார்பில் உதைக்க, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பூமிக்குப் புறப்பட்டு வந்தாள் மகாலட்சுமி.

மகாலட்சுமியைத் தேடுவதைச் சாக்காக வைத்துக் கொண்டு பூமிக்கு வந்தார் திருமால். திருவேங்கடமலையில் ஸ்ரீநிவாசனாக எழுந்தருளினார். பூமியில் ஓரிடத்தில் கோயில் கொண்டால் போதாது, இன்னும் பல இடங்களில் கோயில் கொள்ள வேண்டும் அல்லவா, அதனால் ஒரு மலை உச்சியில் எழுந்தருளினால் அங்கிருந்த படி இன்னும் எங்கெங்கெல்லாம் கோயில் கொள்ளலாம் என்று கழுகுப் பார்வை போல் பார்த்துத் திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதால்தான், திருவேங்கட மலையை முதலில் தேர்ந்தெடுத்தாராம்.

பிராட்டி பெருமாளிடம், நீங்கள் எடுத்துக் கொள்ளும் திருமேனி கரிய நீருண்ட மேகம் போல் நன்றாகக் கருத்திருக்க வேண்டும். அப்போதுதான் மூவகை வெப்பங்களில் தவிக்கும் மக்களைக் குளிர்வித்து அருள வசதியாக இருக்கும் என்றும் கூறினாளாம். அதனால்தான் கார்மேனியோடு திருமலையில் கோயில் கொண்டு, திருமலையோடு நில்லாமல், மேலும் பல திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் கார்மேனியோடு கோயில் கொண்டு, இன்றளவும் நம்மை அருள்மழையில் நனைத்து அருள்புரிந்து வருகிறார்.

க்ருபே விகதவேலயா க்ருத ஸமக்ரபோஷைஸ் த்வயா

கலிஜ்வலந துர்கதே ஜகதி காளமேகாயிதம்

வ்ருஷ க்ஷிதி தராதிஷு ஸ்திதிபதேஷு ஸாநுப்லவைர்

வ்ருஷாதிபதிவிக்ரஹைர் வ்யபகதாகிலாவக்ரஹை:

என்று இக்கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் ``தயா சதகம்’’ என்ற துதியிலே தெரிவிக்கிறார்.இப்படிக் கலி நாளுக்கு இரங்கிக் கல்லிலே இறங்கி நிலையாகக் கோயிலில் நின்று நம்மை வாழ்விப்பதால், திருமால் ஜீவ என்று அழைக்கப்படுகிறார். ஜீவ என்றால் வாழ வைப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 515-வது திருநாமம்.``ஜீவாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்துத் தனக்குத் தொண்டு செய்ய வைத்து வாழ்வை அருள்வார்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: