எல்லா நோய்க்கும் மருந்து உண்டு!

நோய் துன்பம் ஏற்படும்போது சிலர் அப்படியே மனமுடைந்து போய்விடுவார்கள். `என்ன பாவம் செய்தோமோ இப்படிப் பிடித்து வாட்டுகிறதே’ என்றெல்லாம் புலம்புவார்கள். மக்களுக்கு ஏற்படும் அனைத்துக் கஷ்ட நஷ்டங்களும் இறைவன் நிர்ணயித்தவை. அவனுடைய நாட்டமின்றி, அனுமதியின்றி, யாருக்கும் எந்தக் கஷ்டமும் ஏற்பட்டுவிடாது.

இந்த நம்பிக்கை நம் நெஞ்சில் ஆழமாக இருக்க வேண்டும். அதே சமயம் சில துன்பங்கள் மக்களின் வினைக்குரிய பலன்களே என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். மக்கள் செய்யும் பாவங்களின் காரணத்தால் துன்பங்களும் புதுப்புது நோய்களும் ஏற்படுகின்றன என்று இறை வேதமும் நபிமொழியும் கூறுகின்றன.

‘‘எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்ததுதான்…’’ (குர்ஆன் 42:30) (விபச்சாரம்) போன்ற பாலியல் தீமைகள் எந்தச் சமுதாயத்தில் பெருகுமோ அந்தச் சமுதாயத்தில் புதிய புதிய நோய்கள் தோன்றும் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். மக்கள் புறத்தூய்மையை மாசுபடுத்தினாலும் அகத்தூய்மையை மாசுபடுத்தினாலும் நோய்களைக் கொண்டு தண்டிக்கப்படலாம்.

ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு. ‘‘முதுமையைத் தவிர ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு’’ என்று நபிகளார் (ஸல்) அறிவித்திருக்கிறார். இது நோயாளிக்கு ஆறுதலும் மருத்துவர்களுக்கு ஊக்கமும் அளிக்கிறது. மருந்து உண்டு என்றால் அதன் மூலம் ஆரோக்கியம் கிட்டும். இதுவரை ஒரு குறிப்பிட்ட நோய்க்கு மருந்து இல்லை எனில் விரைவில் கண்டுபிடிக்கப்படலாம் என்ற முன்னறிவிப்பும் இதுவே ஆகும்.

ஒரு பகுதியில் தொற்று நோய்கள் பரவியுள்ளன எனில், என்ன செய்ய வேண்டும்? நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்: ‘‘ஒரு பகுதியில் தொற்று நோய்கள் பரவியுள்ளன என்று நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு செல்ல வேண்டாம். நீங்கள் இருக்கும் பகுதியில் பரவியிருந்தால் உங்கள் பகுதியை விட்டும் செல்ல வேண்டாம்.’’

இடம்விட்டு இடம் போவது, நோய் பரவுவதற்கும் தேவையற்ற பீதி கிளம்புவதற்கும் காரணமாகி விடலாம் என்று கருதியே நபிகளார் இதைத் தடுத்துள்ளார்.

எத்தகைய நோயாக இருந்தாலும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் அது மாபெரும் புண்ணியமாகும் என்று மார்க்கம் கூறுகிறது. நோயாளியை நிர்க்கதியாக விட்டுவிடக் கூடாது.

நோய்வாய்ப்பட்டாலும் படாவிட்டாலும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடலையும் உடையையும் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன் உளத்தூய்மைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். செய்த பாவங்களுக்கு இறைவனிடம் தொடர்ந்து பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.

தீய சிந்தனைகளால் உடல் நலம் பாதிக்கிறது என்பதை ஆன்மிகச் சான்றோர்கள் மட்டுமல்லர், மருத்துவ வல்லுநர்களும் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஆன்மிகம் காப்போம்! ஆரோக்கியமாய் வாழ்வோம்!

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

 ‘‘துன்பங்களின் போது பொறுமையுடன் நிலைத்து நிற்பவர்கள் புண்ணியவான்கள் ஆவார்கள்’’ (குர்ஆன் 2:177)

Related Stories: