ஆண்டாள் ஏன் மார்கழியை தேர்ந்தெடுத்தாள்?

கோபிகைகள் காட்டிய வழி

ஆயர்பாடியில் பஞ்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்ட வேளையில், ஊரில் மழை பொழிவதற்காக மார்கழி நோன்பு நோற்குமாறு ஊர்ப்பெரியவர்கள் கோபிகைகளை அறிவுறுத்தினார்கள். ஆனால், கண்ணனையே தங்கள் உயிராகக் கருதிய கோபிகைகள், ஊரார்க்கு மழை வேண்டும் என்ற பிரார்த்தனையோடு சேர்த்து, தங்களுக்குக் கண்ணனே கணவனாக வரவேண்டும் என்ற பிரார்த்தனையையும் முன்வைத்து மார்கழி நோன்பு நோற்றார்கள்.

அதிகாலையில் எழுந்து பஜனை செய்து கொண்டு யமுனாநதிக்கரைக்குச் சென்று, யமுனையில் நீராடி காத்யாயனி தேவியை வழிபட வேண்டும் என்பது நோன்புக்கான வரையறை. நோன்பு நோற்க யமுனை நதிக்கரைக்குச் செல்லும் கோபிகைகளுக்குத் துணையாகக் கண்ணனையே ஊர்ப் பெரியவர்கள் அனுப்பி வைத்தார்கள். இதனால் கோபிகைகளுக்கு இரட்டை மகிழ்ச்சி - கண்ணனை மணப்பதற்காக நோன்பு நோற்கிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம், கண்ணனே அதற்கு துணையாக வருகிறான் என்ற மகிழ்ச்சி மறுபுறம்.

ஆனால், இவற்றை விடவும் கோபிகைகளுக்கு எது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றால், கண்ணனுக்காக நோன்பு நோற்கும் மாதம் தற்செயலாக மார்கழி மாதமாக அமைந்ததே ஆகும். ஏனெனில், மார்கழி மாதக் குளிருக்குப் பயந்து ஊர்ப்பெரியவர்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள். அதனால் இடையூறின்றிக் கண்ணனை அனுபவித்து, அவனோடு ஆனந்தமாகக் களிக்கலாம் என்று எண்ணி மகிழ்ந்தார்களாம், கோபிகைகள்.

கண்ணனை மணக்க விரும்பிய ஆண்டாளுக்கு இந்த கோபிகைகளே முன்னோடிகள்! திருப்பாவை 26-ம் பாசுரத்தில், “மேலையார் செய்வனகள் - பெரியோர்கள் எந்த விதத்தில் ஒரு செயலைச் செய்கிறார்களோ, அதே வழியைப் பின்பற்றி நாம் செய்ய வேண்டும்!” என்று பாடியிருக்கிறாள்.

அதனால்தான் கோபிகைகள் நோன்பு நோற்ற அதே மார்கழி மாதத்தில், தன்னையே ஒரு கோபிகையாக நினைத்து, தனது தோழிகளை எல்லாம் கோபிகைகளாக எண்ணிக் கொண்டு, தனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாகக் கருதி, அங்குள்ள திருமுக்குளத்தை யமுனா நதியாக எண்ணி, அங்குள்ள வடபத்ரசாயீ திருக்கோயிலை நந்தகோபனின் இல்லமாகக் கருதி, அங்குள்ள பெருமாளையே கண்ணனாக எண்ணி, கோபிகைகளின் வழியை அப்படியே பின்பற்றி இந்த மார்கழி நோன்பை நோற்றாள் ஆண்டாள். கோபிகைகள் நோன்பு நோற்ற மாதம் மார்கழி என்பதால், அவர்களைப் பின்பற்றிய ஆண்டாளும் அதே மார்கழி மாதத்தில் இந்த நோன்பை அனுஷ்டித்தாள்.

கேசவ மாதம்

மார்கழிதான் திருமாலுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மார்கழிக்குக் கேசவ மாதம் என்றே பெயர். கீதையில் கண்ணன்,“மாஸானாம் மார்கசீர்ஷோஹம்” (மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன்) - என்று கூறுகிறான். அதனால் அவனை மணக்க விரும்பி நோன்பு நோற்கும் மாதம், அவனுக்கு உகந்த மாதமாக இருக்கவேண்டும் என்று கருதினாள் ஆண்டாள். அதனால்தான் மார்கழியைத் தேர்வு செய்தாள்.

இறைவழிபாட்டுக்கான மாதம்

கோயில்களில் திருமாலுக்குப் பூஜை செய்யும் முறையைக் கூறும் பாஞ்சராத்ர ஆகமம், வருடத்தின் முதல் மாதமாக மார்கழியையே சொல்கிறது. அதைப் பூஜ்ய மாதம் என்றும் அழைக்கிறது. அதென்ன பூஜ்ய மாதம்? அமங்கல மான மாதமா? வடமொழியில் ‘பூஜ்ய:’ என்றால் பூஜிக்கத்தக்கவர் என்று பெயர். அனைவராலும் வணங்கத்தக்கவரான இறைவனுக்குத் தான் பூஜ்யன் என்று பெயர். பூஜ்யனான இறைவனுக்குரிய மாதம் என்பதால், மார்கழி பூஜ்ய மாதம் எனப் படுகிறது. பூஜிக்கத் தக்கவரான இறைவனைக் குறித்துப் பூஜைகளும் வழிபாடும் செய்யத்தக்க மாதம் என்று பொருள். எனவே இது மிகவும் மங்களகரமான மாதமே ஆகும்.

தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தம்

பூமியில் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதில், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாதங்களாகிய உத்தராயண காலம் தேவர்களின் பகல் பொழுதாகும். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள தட்சிணாயண காலம் தேவர்களின் இரவுப் பொழுதாகும். மார்கழி மாதம் என்பது தேவர்களின் இரவு முடிந்து பகல் பொழுது விடியும் காலமாகிய பிரம்ம முகூர்த்தமாக அமைந்துள்ளது.

பிரம்ம முகூர்த்தம் என்பது இறைவழிபாட்டுக்கு உகந்த பொழுதாகச் சொல்லப்படுகிறது. அதிகாலைப் பொழுது மனிதர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். எனவே மார்கழி மாதத்தில் அதிகாலையில் நாம் இறைவழிபாடு செய்தால், அது தேவர்கள் மனிதர்கள் இருவருக்கும் பிரம்ம முகூர்த்தமாக அமைவதால், மிகவும் விசேஷமானதாகும்.

மார்க்கங்களில் தலையாயது

மார்கழி மாதத்துக்கு வடமொழியில் ‘மார்கசீர்ஷம்’ என்று பெயர். ‘மார்க்கம்’ என்றால் வழி. ‘சீர்ஷம்’ என்றால் தலை. ‘மார்கசீர்ஷம்’ என்றால் மார்க்கங்களுள் தலையாயது என்று பொருள்படும். இறைவனை அடைவதற்குப் பலவிதமான மார்க்கங்கள் சொல்லப்படுகின்றன. சாஸ்திரங் களில் சொல்லப்பட்ட கடமைகளைச் சரியாகப் பின்பற்றி, அவற்றின் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்தல் கர்மமார்க்கமாகும். பரமாத்மாவையே சிந்தித்து தியானித்து அதை அறிதல் ஞானமார்க்கமாகும்.

இறைவனையே இடையறாது காதலுடன் சிந்தித்து தியானித்து வழிபடுதல் பக்தி மார்க்கமாகும். இறைவனை அடைய அவனே வழி என்று புரிந்து கொண்டு சரணாகதி செய்தல் பிரபத்தி மார்க்கமாகும். இப்படி இறைவனை அடையப் பல மார்க்கங்கள் இருந்தாலும், இவை அனைத்தை விடவும் தலையாய மார்க்கமாக இருப்பது எது என்றால் ‘ஆசார்ய நிஷ்டை’ ஆகும். ஆசார்ய நிஷ்டை என்பது யாதெனில், இறைவனின் வடிவமாக நம் முன்னே காட்சி தரும் ஒரு நல்ல குருவை அண்டி, அவரது திருப்பாதங்களே கதி என்று அந்த குருவிடம் சரணாகதி செய்வதே ஆகும்.

அதுதான் இறைவனை அடைவதற்கான எளிய மார்க்கமாகும், சிறப்பான மார்க்கமும் ஆகும். முக்திக்கான மார்க்கங்களுள் தலையாயதானபடியால், ஆசார்ய நிஷ்டைக்கு ‘மார்கசீர்ஷம்’ (மார்க்கம்=வழி, சீர்ஷம்=தலை) என்று பெயர். இப்படிப் பலப் பல பெருமைகள் மிகுந்த மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து ஆண்டாள் திருப்பாவையைப் பாடினாள். இந்த மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமல் ஓதிச் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று நீங்காத செல்வம் நிறைந்து வாழ்வோமாக!

தொகுப்பு: கோகுலகிருஷ்ணா

Related Stories: