சாத்தான்குளம்: சாத்தான்குளம் வாரச்சந்தை அருகில் அமராவதி ஓடையில் உள்ள மணல் திட்டுகளை உடனே அகற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் பேரூராட்சி மற்றும் பண்டாரபுரம், விஜயனூர், மேலசாத்தான்குளம் பகுதிகளில் பெய்யும் மழை வெள்ள நீர் சாத்தான்குளம் ஓடை வழியாக அமராவதி குளத்திற்கு வந்து நிரம்பிய பின் கருமேனி ஆற்றில் கலக்கிறது. இந்த குளத்திற்கு செல்லும் ஓடையானது தற்பொழுது கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டது. சாத்தான்குளம் புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் உள்ள வாரச்சந்தையின் தெற்கு பகுதியில் செல்லும் இந்த ஓடை மணல் திட்டுகளால் குறுகலாக மாறிவிட்டது. இதனால் மழைக்காலங்களில் வெள்ள நீர் செல்வதில் தேக்கம் ஏற்படுகிறது. மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்து குடியிருப்பு வாசிகள் தண்ணீரில் தத்தளிப்பது ஒவ்வொரு மழை காலத்திலும் தொடர்கதையாக இருக்கிறது. மழைக்காலம் தொடங்கும் முன்பு அமராவதி குளத்திற்கு தண்ணீர் செல்லும் ஓடையின் கரைகளில் உள்ள மணல் திட்டுகளை ஜேசிபி இயந்திர மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றினால் வடக்கு ரத வீதி, அண்ணாநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் தேங்காமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். எனவே, ஓடையில் காணப்படும் மணல் திட்டுகளை விரைவில் அகற்றுமாறு வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post சாத்தான்குளம் வாரச்சந்தை அருகே ஓடையில் மணல் திட்டுகளை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.