மனம் விரும்பும் அனன்ய யோகம்

தீவிர பக்தி எண்ணங்கள் ஆழ்மனதின் தன்னுணர்வற்ற நிலையில் தனி மனித பக்தி சார்ந்த இயக்கத்தை முன் நகர்த்தும் வல்லமை பெறுகிறது. மனித மனம் உணர்வின் குவியல்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதை படைப்பின் தனித்துவ ரகசியமாகவே கருத இடமிருக்கிறது. மனம் தன்னுணர்வினால் உயிர்ப்புடன் இருக்கும் நிலைக்கு முன்னான தன்னுணர்விற்கு முந்தைய நிலையும், உயிர்ப்பு நிலையும் தன்னுணர்வற்ற நிலையும் மனித மனத்தின் பக்திக்கான கோயிலொன்றை எழுப்ப தகுதியான இடமாக அமைகிறது.

எண்ணங்கள் அரங்கனை நோக்கிக் குவிக்கப்பட வேண்டுமென்பது பக்தி மனதின் ஆசை மட்டுமே. குவித்தல் அவ்வளவு சுலபமல்ல. இரண்டு ஆகப்பெரிய ஆன்மிகச் சக்திகள் தனிமனித இதயத்தை இயக்குகின்றன. அதி தீவிர ஆன்மிக தளத்தில் மரணத்திற்குப் பின்னான வாழ்வியல் அல்லது ஆன்மவியல் என்ன என்பதன் தேடல் சார்ந்த சக்தி முதலாவது. இரண்டாவதாக, கண்ணால் காணமுடியாத இறையை அல்லது அரங்கனை காண்பதற்காக இகவாழ்வின் ஆன்மிகத் தேடல் சார்ந்த சக்தி.

மரணத்திற்குப் பின்னான வாழ்வியல் என்பது கற்பனையால் மட்டுமே கட்டமைக்கப்பட்டதல்ல. சமூகவியலில் உளவும் கட்டுக் கதைகள், ஆன்மாவின் அலைச்சல் பற்றிய புராணச் செய்திகள் இன்னமும் பெரும்பாண்மைச் சமூகத்தவர்களால் செய்யப்படும் நீத்தார் நினைவு வழிபாடுகள் மற்றும் படையல்கள் ஆகியவைகளால் மனித மனதின் தகர்க்கமுடியாத உணர்வின் ஆழ்நிலையில் பதிக்கப்பட்ட வாழ்வியல் உண்மைகள்.

அடுத்ததாக இறையின் இருத்தல் பற்றிய நிஜம், அதற்கான தேடல், இவைகள் தரும் மன அழுத்தம், இறை நோக்கிய பயணத்தின் இடர்பாடுகள், பயணத் திட்டத்தின் மாற்றங்கள், வழிகாட்ட கிடைக்கும் ஆன்மிக குரு, வழிகாட்டல் இல்லாத தனிவழிப் பயணம், இடைத் தடங்கல்கள், தடுமாற்றங்கள், எதிர்படும் சவால்கள், மனதின் உணர்வு நிலையில் தனிமனிதன் இயக்கப்படுதல், அதன் இயங்கு நிலை உண்மைகள் போன்றவையென எடுத்தாள முடியும்.

மேற்சொன்ன இரண்டு நிலைகளையும் ஆழ்மனம் தவிர்க்க முடிந்து அரங்கனை நோக்கிய எண்ணக் குவியலை குவித்துக் கொண்டே அதன் கூர்முனையை உயர்த்தி அந்த ஊசி முனையில் நின்று கொண்டே சிந்தாமல் சிதறாமல் தவம் இயற்ற சாத்தியப்படுமாயின், அதை ``அனன்ய யோகமென’’ அரங்கனே சொல்கிறான். அப்படியான யோக நிலையில் மனிதமனம் தன்னுணர்வற்ற ஆழ்நிலை தியானத்திற்கு தயாராகி, இறையின் தரிசன நேரத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கத் தொடங்கும். இறையின் தரிசனம் சித்திக்குமா….?

அரங்கன் சொல்கிறார்;

அநந்யாஸ்சிந்தயந்தோமாம் யேஜநா: பர்யுபாஸதே!

தேஷாம் நித்யாபியுக்தா நாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம்..!!

“இதயம் எதைப் பற்றியும் சிந்தனை செய்யாமல் எந்தவித விருப்பும் வெறுப்பும் இல்லாமல் பகவான் ஒருவனிடம் அனன்ய பிரேமையுடன், பகலும் இரவும் தியான நிலையில் இயங்க முடிகிறதோ, அவ்வாறான இதயத்தில் அரங்கனான நான் இருக்கிறேன். அந்த இதயத்தின் இயங்கு நிலைக்கான உடற் சக்தியையும் உளச் சக்தியையும் உயிர் சக்தியையும் நானே உருவாக்குகிறேன். அப்படியான பக்தர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி, என்னை அடைய அல்லது காணவேண்டிய யோகத்திற்கான சாதனா சக்தியையும் அளிக்கிறேன்”. என்று சொல்கிறார். இதயம் எண்ணங்களை அரங்கனை நோக்கிக் குவிக்க வேண்டுமாயின், அதற்கான காரணங்கள் தேவை.

காரணங்களை கற்பித்துக் கொள்ள முடியாதென்பதே நிஜம். வாழ்வின் அனுபவங்கள், எதிர்கொண்ட ஆன்மீக சவால்கள், கடந்து வந்த கசப்பான ஆன்மீகப்பயண அனுபவங்கள், வாழ்வின் துன்ப நிலைகளால் துவண்டு கிடந்த சக்தியிழந்த நாட்கள் அல்லது நேரங்கள், மகிழ்வின் பின் நோக்கிய தள்ளல்கள். வாழ்வாங்கு வாழ்ந்தும் எட்டமுடியாத எல்லைகள் என காரணங்கள் கண்முன்னே வரிசை கட்டி நின்றாலும், எண்ணம் அரங்கனை நோக்கி மட்டுமே தனது கால்களை நகர்த்தும் என்பது முற்றிலும் நிஜமென கூறமுடியாது.

பிறகு எப்படி அனன்ய யோகம் சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பமுடியும். உலகியல் சார்ந்த உருவங்களை ஆழ்மனதிலிருந்து அழிக்க வேண்டும். சற்றே கடினமான சவால் தான்… இருப்பினும் சாத்தியப்படும் ஒன்று என்றே அரங்கன் கூறுகிறார். அனன்யோ சிந்தயந்தோமாம் என்று கூறும் ஒற்றை வாக்கியத்தில் அதை சாத்தியப் படுத்துகிறார். `மாம்’ என்றால், இங்கே அரங்கனைக் குறிக்கும். அரங்கனின் முகம் மனதில் பதியப் பதிய உலகியல் சார்ந்த உருவங்கள் மெல்ல இடம்பெயர்ந்து வண்ணமிழந்து உயிரிழந்து ஆழ்மனம் விட்டு ஓடிவிடும்.

அரங்கனின் உருவம் மட்டுமல்ல, அரங்கனின் குண நலன்கள், அரங்கன் எனும் நிரூபனமான தத்துவம், அரங்கனின் இருப்பை அல்லது இறையின் இருத்தல் பற்றிய நிஜம், மனம் முழுவதும் மெல்ல உருக்கொள்ளத் தொடங்கும். அந்தத் தொடக்கம் யோக நிலையின் முதற்படி. அடுத்த நகர்வில் மானுடச் சிந்தனை மெல்ல மெல்ல அரங்கனை நோக்கிய பயணத்தில்

வேகமெடுக்கும். அது யோக நிலையின் அடுத்த ஞான நிலை. அரங்கனே அனைத்தும் என்ற உணர்வு ஆழ்மனமெங்கும் நிரம்பித் தளும்பும். அது மெய்ஞான நிலை. அரங்கனைக் காண வேண்டிய மெய்ஞான நிலையிலான மனித இயக்கத்தின், செயற்பாடுகளே அனன்ய யோகத்தின் தொடக்கம் என்று ஏற்றுக் கொள்ள முடியும்.

உலகியல் சார்ந்த உருவமான உடல் அழியக்கூடியது. மரணம் நிச்சயம்… மரணத்திற்கு பின் என்ன என்ற கேள்வியை உபநிஷத்துக்களில் ஆகச் சிறந்த கவிதை வடிவமான கடோ பநிஷத் எழுப்புகிறது. மனதின் ஆழ்மனதில் மரணத்துடன் அனைத்தும் முடிவுக்கு வருகிறது என்ற எண்ணம் ஒருபுறமும், இல்லை... ஆன்மாவிற்கான மரணம் என்பது எப்போது என்பதறியாமல் வெறும் உடலின் மரணம் அனைத்திற்குமான முடிவாக இருத்தல் என்பதை ஒப்பமுடியாது என்பது மறுபுறமும், கைகோர்த்து வாழ்வின் தண்டவாளங்களில் விழாமல் சிறிது தூரம் நடக்க முயற்சிக்கிறது. ரிக் வேதச் செய்யுள் ஒன்றில், அக்னி தேவனை நோக்கிய பாடலில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது.

``ஓ அக்னி தேவனே… உன் ஓங்கி எழும் தணற்பிழம்புகளில் கிடத்தப்பட்ட மனித உடலை மென்மையாக ஏந்திக் கொள். அந்த உடலில் இருந்து பிரிந்த ஆன்மா, உன் பிழம்புக் கைகளுக்கு எட்டும் தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறது. உடலை மெல்ல நீ உட்கொள்ளும் பொழுதுகளில், ஆன்மாவிற்கான இன்னொரு ஒளி உடலை நீ உருவாக்கித் தருகிறாய். தரவேண்டும்… அப்படியான உடல் ஆன்ம உலகத்திற்குள் நுழையத் தேவையான ஒளியை நீ தரவேண்டும். அங்கே அந்த ஆன்மாவிற்கான மூதாதையர்களின் ஆன்மாவுடன் அதுவும் இணையவேண்டும். ஆன்ம உலகத்தில், உலகியலின் நீட்சியான துன்பமோ... மரணமோ... துக்கமோ... இருப்பதற்கான வாய்ப்பில்லை என்பதை நீ அறிவாய். எனவே அக்னி தேவனே… நீ ஏந்தியிருக்கும் மனித உடலை மெல்ல வலியின்றி உட்கொள்வாயாக.”

உலகியல் சார்ந்த உருவ அழிவின் ஆரம்பம் ஆன்ம பலத்திற்கான திறப்பென கருத இடமிருக்கிறது. அரங்கனின் அல்லது இறையின் உருவம் மெல்ல ஆழ்மனதில் உருக்கொள்ள ஆகப் பெரிய கதவும் திறந்து கொள்ளும் சப்தம் மெல்ல கேட்கத் தொடங்கும்.

இதைத்தான் மாணிக்கவாசகப் பெருமான்;

மாடு நகைவாள் நிலா எறிப்ப

வாய் திறந்து அம்பவளம் துடிப்ப

பாடுமின் நம் தம்மை ஆண்டவாறும்

பணி கொண்ட வண்ணமும் பாடிப்பாடி

தேடுமின் எம்பெருமானைத் தேடிச்

சித்தம் களிப்பத் திகைத்துத் தேறி

ஆடுமின் அம்பலத்து ஆடினானுக்கு

ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே

- என்று தமிழில் பேயாட்டம் ஆடுகிறார்.

ஆழ்மன எண்ணங்களை முற்றாக அறியக் கூடிய சக்தி சாமானிய மனிதனுக்கு இயல்பிலேயே இருக்குமானால், அதுவே பெருவரம். ஆன்ம திறன் என்பதும் பிறவியிலேயே, அதுபோன்ற சாமானியனுக்கு வாய்த்து விடுவதையும் பார்க்க முடியும். அந்தச் சாமானியனை அடையாளம் காண்பது அரிது. ஆயினும், தொடர் ஆன்ம பயிற்சியினால் அரங்கன் உருவத்தை ஆழ்மனதில் வரைந்து கொள்ள முடியும். சற்று முயன்றால், ``அனன்ய யோகம்’’ அதன் அத்துனை கரங்களுடனும் அவனை கும்பிட்டு வரவேற்கும். ஆன்மிக உலகியலின் பாதைகள் செம்பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கின்ற சாலைகள், அதன் வெளியெங்கும் ஞானரோஜாக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

தனிமனிதன் தன் ஆழ்மனதை உணரத் தொடங்கும் வேளையில், ஆன்ம உலகியலின் பாதைக்கான கதவகங்கள் திறந்து கொள்வதைக் காணமுடியும். ஞான புஷ்பங்களின் வாசம், நாசி நிறைப்பதையும் நுகரமுடியும். ஆழ்மனதை திறந்து பார்க்கும் சக்தி பிறப்பிக்கப்படும். பொழுதுகள், தங்களைப் பூட்டிக் கொண்டிருக்கின்றன. அதன் சாவி சாமானியர்களின் கைகளில்தான் கிடந்து துருவாகிக் கொண்டிருக்கிறது.

ராகவபிரியன்

Related Stories: