சென்னை: பி.வி பிரேம்ஸ் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தின் தொடக்க விழா நடந்தது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழுவினரை வாழ்த்தினார். தயாரிப்பாளர் தனஞ்செயன் கிளாப் போர்டு அடிக்க, இயக்குனர் சசி கேமராவை ‘ஆன்’ செய்தார். ஏ.ஆர்.முருகதாஸிடம் ‘சர்கார்’, ‘தர்பார்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பாபு விஜய் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஜெய் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, ‘கேஜிஎஃப்’ கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் நடிக்கின்றனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். ‘டார்லிங்’ ரிச்சர்ட்சன் எடிட்டிங் செய்ய, எஸ்.கண்ணன் அரங்குகள் அமைக்கிறார்.
ஒருவன் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் ஆச்சரியமான மாற்றங்கள் மற்றும் அதிர்வுகள் இக்கதையின் மையப்புள்ளி. நம் நாட்டில் நிகழ்ந்து வரும், தொடர்ந்து நிகழப்போகும் ஒரு மாபெரும் ஆபத்தைப் பற்றி இப்படம் பேசுகிறது. காதலும் களவும் என்ற அன்பின் ஐந்திணையைக் கொண்டு, அழகான வாழ்வியல் படமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் கொடைக்கானல், நெல்லூர் ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
