சகலகலாவல்லியே சரணம்!

இறைச்சுவை இனிக்கும்  இலக்கியத் தேன்  - 56

‘‘செல்லும் இடங்களில் எல்லாம் சிவப்புக் கம்பள வரவேற்பு! அவரோடு உரையாடி மகிழ் வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆனந்த அனுபவம்! காரணம் என்ன? அற்புதமான சொல்லாற்றல்! நீறு பூக்காத நினைவாற்றல்! அனைவரையும் கட்டிப்போடும் அறிவாற்றல்! தக்க இடத்தில் ஏற்ற உதாரணங்களையும், புள்ளி விவரங்களையும் அள்ளிவிடும் ஆழமான அறிவு ! கலை மகளின் கடாட்சம் பெற்றுவிட்டால்

‘சென்ற இடமெல்லாம் சிறப்பு’ தானே !

‘கல்வி அழகே அழகு’ என்றும்

‘கல்வியின் ஊங்கில்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை’ என்றும்

‘அறிவுடையார் எல்லாம் உடையார்’

என்றும்புலவர்கள் கண் கண்ட தெய்வமான கலைமகளைப் போற்றுகின்றனர். முப்பெரும் தேவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதியை ஒன்பது நாட்கள் வழிபடும் நவராத்திரி விழா சரஸ்வதி பூஜையுடன்தான் நிறைவுக்குவருகிறது. கலைமகளே நாற்பத்து ஒன்பது புலவர்களாக இருந்து தமிழ்ச் சங்கத்தில் வீற்றிருந்தாள் என்று திருவிளையாடற்புராணம் கூறுகின்றது. எல்லாவற்றையும் கடந்தும், அதே சமயத்தில் எல்லாவற்றுக்குள்ளும் இருப்பதால் தான் ஆண்டவனைக் ‘கடவுள்’ என்று அழைக்கின்றோம். அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த  பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது  எது? தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும் படிக்கு இச்சைவைத்து உயிர்க்கு  உயிராய் தழைத்தது எது ? என்று தாயுமானவரின் தமிழ் ‘கடவுள்’ என்ற பதத்தின் பொருள் விரிவைக் காட்டுகின்றது.

ஆனால், புலவர்கள் சரஸ்வதி தேவியைக் கண் கண்ட தெய்வம்’ என்று பாராட்டுகிறார்கள். காரணம் என்ன  என்று காண்போமா? குமரகுருபரரின் மிகச் சிறந்த கலை மகள் துதி நூலான சகலகலாவல்லி மாலை கீழ்க்கண்டவாறு பாடுகின்றது.

மண் கண்ட  வெண்குடை  கீழாக  மேற்பட்ட மன்னரும்  என்

பண் கண்ட  அளவில் பணியச் செய்வாய்! படைப்போன்  முதலாம்

விண் கண்ட தெய்வம் பல்கோடி உண்டு எனினும் விளம்பில்  உன்போல்

கண் கண்ட தெய்வம் ஒன்று உளதோ சகல  கலாவல்லியே!

தூய்மையான வெள்ளைத் துணி உடுத்தி வெண்மையான படிக நிறமாலை அணிந்து, வீணைமீட்டி, வெள்ளைத்தாமரையில் வீற்றிருப்பவள் மட்டுமல்ல  சரஸ்வதி

தேவி. எண்ணும் எழுத்துமாக நம் எல்லோர் கண்களிலும் தெரிவதுவும். அவளின் தோற்றம்தானே ! எனவே தான் கலைமகள். கண் கண்ட தெய்வமாகக்

கவிஞர்களால் ஆராதிக்கப்படுகின்றாள்.

‘ஆழ்ந்து அகன்ற நுண்ணியம்’ என்கிறார் மாணிக்கவாசகர். ஆண்டவருக்கான இப்புகழ்ச்சி

அறிவுடைமைக்கும் பொருந்திவருகிறது.

சரஸ்வதியின் அருளைப் பெற்றவர்

களின் புலமை ஆழம் உடையதாகவும், பரந்து பட்டு அனைத்து விஷயங்களையும் அறிந்ததாகவும், கூர்த்த நுட்பம் மிக்கதாவும் பொலியும். ஆழங்கால் பட்ட அறிவு, பரந்து விரிந்த ஞானம், கூரிய, சீரிய வித்தகம் மூன்றும் பொருந்திய முழுமைப் புலமையை முதல்வி வழங்குகிறாள். எனவே கலைமகளின்  கடாட்சம் பெற்றால் வாதம்புரிவதில் வெற்றி பெறலாம். அனைவர் மனத்தையும் ஆராய்ந்து அறியும் வல்லமை பெறலாம். எல்லோர்க்கும் விளங்கும் வண்ணம் எதைப் பற்றியும் எடுத்துரைத்து உணர வைக்கலாம். எதையும் நிச்சயித்து நிரூபணம் செய்யலாம். வாழ்வில் வெற்றி பெறலாம். முடிவில் முக்திப் பேற்றையும் அடையலாம் என்று கம்பர் தாம் பாடிய சரஸ்வதி அந்தாதியில் பாடுகிறார்.

‘சோதிக்கலாம் தர்க்க  மார்க்கங்கள்!  

எவ் எவர்  சிந்தனையும்

 சோதிக்கலாம்! உறப் போதிக்கலாம்!  சொன்னதே  துணிந்து

 சாதிக்கலாம்!  மிகப் பேதிக்கலாம்!  முக்தி தான் எய்தலாம்!

 ஆதிக் கலாமயில் வல்லி  பொற்றாளை அடைந்தவரே!

விநாயகர், முருகர் , சிவபெருமான், திருமால், பராசக்தி, லட்சுமி என நாம் வழிபடும் தெய்வங்களுக்கான தோத்திர நூல்களும், அவர்களின் புகழ் சரித்திரங்களும்

பல புலவர்களால் பாடப் பட்டுள்ளன. ஆனால் கலைமகள் பற்றிய துதி நூலாக நமக்குக் கிடைப்பவை கம்பர் பாடிய சரஸ்வதி அந்தாதியும் குமர குருபரர் பாடிய

சகல கலா வல்லி மாலையும் தான். காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால் சரஸ்வதியின் பூரண அருள் மூலமாகத்தான் புலவர்கள் காவியங்களை, துதி நூல்களைப் படைக்க முடியும்.

அறிவு பெற்றவர்களுக்கு அடக்கம் வேண்டும்! தற்பெருமை கூடாது என்ற காரணத்தால் கலைமகளே தனக்கான புகழ் நூல்கள் வருவதை விரும்பவில்லை

போலும் !குமர குருபரரின்  சகலகலாவல்லி  மாலை எவ்வாறு உருவானது என்று பார்க்கலாமா? குமர குருபரர் காசியில் ஒரு மடம் நிறுவி  கல்விப் பணியும், சமயத் தொண்டும் புரிய விரும்பினார்.மடம் அமைக்க இடம் வேண்டுமே! அதற்கு மன்னனின் அனுமதி வேண்டுமே!கங்கைநதிக் கரையிலேயே இடம் அமைந்தால் நல்லது.

அதற்காக ஆட்சிபுரியும் நவாப்பைக்  கண்டு பேசலாம் என்று எண்ணினார்.‘நவாப் பிற்குத் தமிழ் தெரியாது. இந்துஸ்தானி பேசுகிற அரசரோடு அவர்

மொழியிலேயே பேச எனக்கு அருள் தரவேண்டும். இந்திமொழிப் புலமையை இப்போதே அருள்க அன்னையே ! என்று கலைமகளை வேண்டினார். சகல

கலாவல்லி மாலை அப்போது தான் பாடினார்.

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல

நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனம் சேர்

செல்விக்கு அரிது என்று ஒருகாலமும்

சிதையாமை நல்கும்

கல்விப் பெருஞ் செல்வப்பேறே!

சகல கலா வல்லியே !

குமரகுருபரர் இந்தியிலேயே உரையாடி இடத்தைப் பெற்று மடம் நிறுவினார்.

கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் எல்லாம் கட்டாயம் சகல கலாவல்லி மாலையை மனனம் செய்யலாம்!கலைமகளின் அருளைப்  பூரணமாகப் பெற்றவர்,

மகாகவி  பாரதியார்.அதனால்தான்  வாலிப  வயதிற்குள்ளேயே  வாழ்வில்  அவரால்  காலம் வெல்லும் கவிதைகளைப் படைக்க முடிந்தது.

‘வாணி கலைத் தெய்வம்

மணி வாக்கு  உதவிடுவாள்’  என்றும்

‘வெள்ளைக் கமலத்திலே  -

அவள் வீற்றிருப்பாள்!

புகழ் ஏற்றிருப்பாள்!

கொள்ளைக் கனி இசைதாள்!
-

நன்கு கொட்டும் நல் யாழினைக் கொண்டிருப்பாள் கள்ளைக் கடல்  அமுதை -  நிகர்கண்ட தோர் பூந் தமிழ்க்  கவிசொலவே பிள்ளைப்   பருவத்திலே  - எனைப்

பேணவந்தாள் அருள்  பேணவந்தாள்!  என்றும் தன்னை மகாகவியாக்கிய அன்னை சரஸ்வதியை ஆராதிக்கின்றார். புவியனைத்தும் போற்றிட வான் புகழ் படைத்துதமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்கவிஅரசர் தமிழ் நாட்டிற்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்தது அன்றே! என்றும் சரஸ்வதியால் தான் பெற்ற மேலான நிலையை  வெளிப்படையாகப் பாட்டில் வியந்து கூறுகிறார்.கலைமகளின் கணவரான அப்பிரம்மதேவரால் தான் நாம் அனைவரும் படைக்கப்படுகிறோம்.

சிவப்பிரகாசர்  சொல்கின்றார் ; கணவரான பிரம்மன் தரும் மானுட உடம்பு நிலைத்திருப்பதில்லை. அழிந்து விடுகின்றது. ஆனால் பிரம்மாவின் மனைவியான

கலைமகள் அளிக்கும் கல்வியோ அழியாமல் காலம் கடந்து வாழ்கிறது. பிரம்மன் படைத்த புலவர்களின் தேகம் அழிந்து விடுகிறது. ஆனால் பிரம்மனின் மனைவி

கலைமகள் அருளால் அவர்கள் படைத்த காவியங்கள் அழிவதே இல்லை. திருக்குறள், பன்னிரு திருமுறை, திருப்புகழ், முதலான நூற்கள் எந்நாளும்

நிலைத்திருந்து உலக மக்களுக்கு உய்வைத் தருவது சகல கலாவல்லியின் சக்தியால் தானே !

(தொடரும்)

தொகுப்பு: திருப்புகழ் மதிவண்ணன்

Related Stories: