வரலட்சுமி எம் இல்லம் எழுந்தருள்க!

ஆடி மாத அமாவாசையில் இருந்து ஆவணி மாத அமாவாசை வரை உள்ள காலத்துக்கு ச்ராவண மாதம் என்று பெயர். அந்த ச்ராவண மாதப் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஏன்?

சுமங்கலிப் பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தின் நலனுக்காகவும், மாங்கல்ய பாக்கியம் என்றும் நிலைப்பதற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.மகத தேசத்தைச் சேர்ந்த சாருமதி என்னும் பெண் தனது கணவனையும், கணவனின் பெற்றோர்களையும் நன்கு பேணி, மிகச்சிறந்த குடும்பப்பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்தாள். அவளது நற்குணங்களைக் கண்டு வியந்த மகாலட்சுமி, அவளது கனவில் தோன்றி, ச்ராவண மாதப் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக் கிழமையில் இந்த வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கச் சொல்லி, அதை அனுஷ்டிக்கும் முறைகளையும் அவளுக்கு உபதேசித்தாள்.

இந்த விரதத்தால் வணங்கப்படும் லட்சுமி தேவியே உபதேசம் செய்த விரதம் என்பதால், வரலட்சுமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. மேலும், இந்த விரதத்தைக் கடைபிடிப்போர் இல்லங்களில் தான் எப்போதும் நித்யவாசம் செய்வதாகவும் மகாலட்சுமி சாருமதியிடம் கூறினாள்.தேவர்களின் நீதிபதியாக இருந்த சித்திரநேமி என்ற பெண், இந்த வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்துத் தனக்கு ஏற்பட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றதாகவும் புராணக் கதை உண்டு.

எப்படி?

வரலட்சுமி விரதம்  31 - 7 - 2020

விரதத்துக்கு முந்தைய நாள் வீட்டைச் சுத்தப்படுத்தி மாக்கோலம் இடுவார்கள். பூஜைக்கான இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகுவார்கள்.

விரதத்தன்று காலை எழுந்து நீராடி, பூஜை அறையில் விளக்கேற்றுவார்கள்.ஒரு கலசத்தினுள் வாசனை திரவியங்கள் கலந்த நீரை நிறைத்து, அதன் மேல் மாவிலைக் கொத்து வைத்து, அதன் நடுவில் மஞ்சள் தடவிய தேங்காயை வைப்பார்கள்.அந்தத் தேங்காயில் லட்சுமியின் உருவத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள்.

கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, அதன்மீது மஞ்சள் சரடை வைப்பார்கள். அஷ்ட லட்சுமிகளோடு ஒன்பதாம் லட்சுமியாக வரலட்சுமி திகழ்வதன் அடையாளமாக அந்தச் சரடில் ஒன்பது முடிச்சுகள் போடப்பட்டிருக்கும்.மலர்களால் கலசத்தில் உள்ள லட்சுமிக்கு அர்ச்சனை செய்து, லட்சுமி அஷ்டோத்தரம், லட்சுமி ஸஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்ரம், ஸ்ரீஸ்துதி உள்ளிட்ட லட்சுமி தேவியைக் குறித்த ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்வார்கள்.

சாதம், பொங்கல், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் உள்ளிட்டவற்றை நிவேதனமாகச் சமர்ப்பித்துப் பூஜை செய்வார்கள்.

பூஜை முடிந்தபின், கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை எடுத்து, விரதம் இருந்த சுமங்கலிப் பெண்கள் தங்கள் வலக்கரத்தில் அணிவார்கள். திருமணமான பெண்களுக்குக் கணவன் சரட்டை அணிவிப்பார். திருமணம் ஆகாத பெண்கள் தாமே அணிந்து கொள்ளலாம்.

தாம்பூலம், மஞ்சள் குங்குமம், புடவை-ரவிக்கை போன்றவற்றைச் சுமங்கலிப் பெண்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, அதன்பின் உணவு உட்கொண்டு, காலை முதல் அனுஷ்டித்த உண்ணா நோன்பை நிறைவுசெய்வார்கள்.

என்ன பலன்?

இவ்வாறு வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் பேறு பெறுவதோடு, அவர்களின் குடும்பங்களில் அனைத்து மங்கலங்களும் நிறையும்.

ஸ்ரீமதி. ஹரிணீ வேங்கடேஷ்

Related Stories:

>