ஒளி பெற்றவர்களாய் நடப்போம்!

‘‘தூங்குகிறவனே நீ விழித்தெழு, மறித்தோரை விட்டு எழுந்திடு, அப்போது, கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்து பிரகாசிப்பார்’’. ஒளி உண்டாகட்டும் என்றார் நம் தந்தையாகிய கடவுள் அது உண்டானது. புவி நன்றாகட்டும் என்றார் அதுவும் நன்றானது. ஒரு காலத்தில் இருளாய் இருந்த நாம் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கின்றோம். ஆகவே ஒளிபெற்ற மக்களாக வாழ்கின்றோம். ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும், நீதியையும், உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது? என்பதை ஆராய்ந்து பார்ப்போம். வீண் வார்த்தைகளால் நம்மை யாரும் ஏமாற்றாமல் பார்த்துக் கொள்வோம்.

பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு நமக்கு உறவு வேண்டாம். அவை குற்றமெனக்கூறி அவர்களுக்கு அதை எடுத்துக் காட்டுவோம்.
Advertising
Advertising

சில நேரத்திலே நாம் பல தவறுகளுக்கு உட்படுவோம். யாரும் நம்மை கண்காணிக்கவில்லை, இதற்கு சாட்சியும் யாரும் இல்லை என்று தைரியமாய் அத்தவற்றினை நாம் செய்வோம். ஆனால் சில பேர், யார் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? ஆண்டவர் என்னைக் கண்காணித்து கொண்டிருக்கிறார். இத்தவற்றினை என்னால் செய்ய முடியாது. நான் செய்யவும் மாட்டேன் என்று தீர்மானமாய் இருப்பார்கள். ஆண்டவர் என்னை பார்க்கிறார், அவருக்கே நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையோடு இருப்பேன் என்று எந்த சூழலிலும் நீதியோடும், நேர்மையோடும் நடக்கிறவர்களே ஒளி பெற்ற மக்களாவர்.

இவ்வாறு யாரும் இதற்கு சாட்சி இல்லை என்று என்பவர்களது செயல்கள் எல்லாம் இது குற்றமென, ஒளியானது, எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது. அவ்வாறு தெளிவாக்கப்படுவதெல்லாம் ஒளி மயமாகிறது. ஆகையால் நம் நடத்தையை பற்றி மிகவும் கருத்தாய் இருக்க வேண்டும். பொய்மை, திருட்டு, களவு, வஞ்சகம் போன்றவற்றை விலக்கி ஞானத்தோடு ஔி பெற்றவர்களாய் வாழ்வோம். இதையே நம் ஆண்டவரது விருப்பமும் ஆகும்.

ஆகவே அறிவிலிகளாய் இல்லாமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்துக் கொள்வோம். தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுவோம். நமது உரையாடல்களில் சங்கீதங்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை இடம் பெறும்படி பார்த்துக் கொள்வோம்.

நேரத்தை வீணாக செலவிடாமல் ஆண்டவருக்காய் செலவிடுவோம். அவரது திருமுக ஒளியில் நாமும் பிரகாசிப்போம். மனமகிழ்ச்சியோடு உளமாற இசைபாடி ஆண்டவரைப் போற்றுவோம். இயேசு கிறிஸ்துவின் ஒளியாலும், அவரது பெயராலும், எல்லாவற்றிற்காகவும், எப்போதும், தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். ஆண்டவரது முக ஒளியில் ஒளி பெற்று, ஒளி பெறுவோம்! ஒளி வீசுவோம்.

தொகுப்பு: ஜெரால்டின் ஜெனிபர்

Related Stories: