சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த கிளை சிறைச்சாலையை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும்

*திருவாடானை பொதுமக்கள் கோரிக்கைதிருவாடானை :  சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த கிளை சிறைச்சாலையை மீண்டும் திருவாடானையில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் சுதந்திர போராட்டத்தில் திருவாடானை பகுதிக்கு முக்கிய பங்கு உள்ளது. இப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான தியாகிகள் சுதந்திர போராட்டத்திற்காக சிறை சென்று பல தியாகங்களை செய்துள்ளனர். திருவாடானையில் தாலுகா அலுவலகம், நீதிமன்றம் காவல் நிலையம், கிளை சிறைச்சாலை ஆகியவை வெள்ளையர் ஆட்சியில் இருந்தே ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தது. நூற்றாண்டுகளை கடந்துவிட்ட திருவாடானை கிளை சிறைச்சாலை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சிறையை பூட்டிவிட்டதால் கைதிகளை ராமநாதபுரத்திற்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து திருவாடானை பகுதி பொதுமக்கள் கூறுகையில், சுதந்திர வரலாற்றோடு தொடர்புள்ள திருவாடானை கிளை சிறைச்சாலை கடந்த 6 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. விசாரணை கைதிகளை ராமநாதபுரத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதனால் போலீசாருக்கு பணிச்சுமையையும், கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு தேவையற்ற அலைச்சலும் ஏற்படுகிறது. திருவாடானை சப் டிவிசனை சேர்ந்த தொண்டி, திருப்பாலைக்குடி, எஸ்பி பட்டினம், ஆர்எஸ் மங்கலம், திருவாடானை உட்பட காவல் நிலையங்களில் பதியப்படும் வழக்குகள் சம்பந்தமாக கைதிகளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு போலீசார் அழைத்துச் செல்கின்றனர். அதில் பல்வேறு கஷ்டங்கள் உள்ளன.இந்தக் கிளை சிறைச்சாலையோடு அதே வளாகத்தில் இருந்த நீதிமன்றம் கட்டிடம் பழுதாகி விட்டதால் ரூ.இரண்டு கோடி மதிப்பீட்டில் புதிய நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கு முன்பு செயல்பட தொடங்கிவிட்டது. ஆனால் சிறைச்சாலை மட்டும் இன்னும் கட்டப்படவில்லை. ஏற்கனவே சிறை இருந்த இடத்திலேயே பழுதான கட்டிடத்தை அகற்றிவிட்டு மீண்டும் அதே இடத்தில் கட்டலாம் என அரசு நிதி ஒதுக்கியுள்ளது. கட்டுவதற்கு தேவையான இடமும் உள்ளது. ஆனால் அந்த இடம் தாலுகா அலுவலகம் பெயரில் பட்டா தாக்கல் ஆகி உள்ளது. எனவே ஏற்கனவே சிறை இருந்த இடத்தை தரை மாற்றம் செய்து சிறை நிர்வாகத்திற்கு ஒப்படைக்க வேண்டும். இதற்கான கோப்புகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. சிறைகட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டா மாற்றத்திற்காக காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் கூறுகையில், சிறைச்சாலை, நீதிமன்றம், பத்திரபதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம் இவைகள் ஒரே வளாகத்தில் நீண்ட காலமாக இருந்து வந்தது. இதனால் தாலுகா அலுவலகம் பெயரிலேயே பட்டா தாக்கல் ஆகி வந்துள்ளது. தற்போது ஏற்கனவே இருந்த அதே இடத்தில் சிறைச்சாலை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிறை நிர்வாகம் சார்பில் தரை மாற்றம் செய்ய கோப்புகள் அனுப்பி உள்ளனர். அவற்றை நடவடிக்கை எடுத்து தாலுகா அலுவலகத்தில் இருந்து கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். அங்கிருந்து சென்னை நில நிர்வாகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவாக நடந்து வருகிறது. கூடிய விரைவில் தரை மாற்றம் செய்து உத்தரவு வந்துவிடும் என்றார். எனவே இது சம்பந்தமான கோப்புகளை விரைவாக அனுப்பி நடவடிக்கை எடுத்து வரலாற்றுத் தொடர்புடைய இந்த சிறைச்சாலையை மீண்டும் அதே இடத்தில் கட்ட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாடானை பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.20 ஆயிரம் பேர் திரண்டு கொளுத்திய சிறைச்சாலைவெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த சின்ன அண்ணாமலை, ராமநாதன் ஆகியோர் தேவகோட்டையில் பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது பிரிட்டிஷ் அரசு இவர்களோடு 5 பேரை கைது செய்து திருவாடானை கிளை சிறையில் அடைத்தனர். சிறையில் இருப்பவர்களை மீட்க வேண்டும் என்ற முடிவில் விளங்காட்டூரை சேர்ந்த செல்லத்துரை தலைமையில் திருவேகம்பத்தில் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு திருவாடானை சிறைச்சாலைக்கு வந்து சிறையை உடைத்து மீட்க முடிவு செய்யப்பட்டது. அதே நாளன்று திருவேகம்பத்தில் ஜமாபந்தி நடந்து கொண்டிருந்தது. இதனால் அங்கு கூட்டப்பட்ட கூட்டம் பற்றிய தகவல் ஜமாந்தி அதிகாரிக்கு தெரியவந்தது. இதை அடுத்து தங்களது மேலதிகாரிக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மதுரையில் இருந்து போலீஸ் பட்டாளம் திருவாடானை நோக்கி வரத் தொடங்கியது. திருவேகம்பத்தில் இருந்து வெகுண்டு எழுந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் திருவாடானைக்கு திரண்டு வந்தனர். திருவாடானைக்கு வரும் முன்னரே நன்னி என்பவரை அனுப்பி சாலையில் உள்ள அனைத்து மரங்களையும் வெட்டி சாய்த்து போட்டனர். ஜெயராம் ஐயர் என்பவருக்கு தகவல் தொடர்பு சாதனங்களை துண்டிக்க வேண்டும் என கட்டளையிட்டனர். இவர்கள் இருவரும் இந்தப் பணியை கச்சிதமாக முடித்தனர். இதனால் போலீசார் மரங்கள் வெட்டி கிடப்பதால் குறித்த நேரத்திற்கு வர இயலவில்லை. 20 ஆயிரம் பேர் திரண்டு வந்த இந்த கூட்டம் திருவாடானை கிளை சிறைச்சாலையை உடைத்து சின்ன அண்ணாமலையுடன் சிறையில் இருந்தவர்களை மீட்டது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை கண்டதும் அங்கு சிறிய அளவில் இருந்த போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர். அதோடு சிறைச்சாலை நீதிமன்றம், தாலுகா அலுவலகம், கிளை கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம் என அனைத்தையும் தீயிட்டு கொளுத்தியது. பின்னர் அந்த சிறைச்சாலையை மீண்டும் புனரமைத்து சுதந்திரப் போராட்டங்களில் பங்கு பெற்றவர்களை இதே சிறையில் வைத்து சித்திரவதை செய்தனர்….

The post சுதந்திர வரலாற்றில் இடம் பிடித்த கிளை சிறைச்சாலையை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: