சென்னை: கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமதேனு வளாகத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறுவதற்கு ரூ.6.69 லட்சம் மதிப்பீட்டில் 350 பேர் அமரும் வகையில் மிகவும் விசாலமான புதிதாக கட்டப்பட்ட காமதேனு திருமண மண்டபத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.இவ்விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் ஆட்சியில் கூட்டுறவுத் துறையின் வாயிலாக மக்களுக்கு சிறப்பான சேவை செய்யப்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட காமதேனு திருமண மண்டபம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதம். முதல்வர் ஆட்சியில் கூட்டுறவுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு போன்ற பலன்கள் வழங்கப்பட்டு தொழிலாளர் நலன் காக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முதல்வர் அயராது பாடுபட்டு வருகிறார். நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளை ‘தமிழ்நாடு தினம்’ என்று கொண்டாடும் பொருட்டு அரசாணை வெளியிட்டமைக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மொழிப்பற்று, தமிழ் மக்களின் ஒற்றுமை, கல்வி, தமிழர்களின் கலாசாரம் தோன்றிய வரலாற்றினை நாட்டிற்கு பறைசாற்றும் வகையில் தமிழர்கள் கடந்து வந்த பாதையினை இன்றைய இளைய சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டும் விதமாக தமிழ்த்துறை மற்றும் இதர துறைகள் வாயிலாக பல்வேறு முயற்சிகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். கூட்டுறவுத் துறையில், மிட்டா மிராசுதாரர்கள் மட்டுமே கோலோச்சிய கூட்டுறவு சங்கங்களில், சாமானிய மக்களும் இடம் பெறுவதை உறுதி செய்தது கழக ஆட்சிதான். கடந்த ஓராண்டு காலத்தில் கூட்டுறவுத் துறை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. அதன் ஒரு அங்கமாக, 5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்து, சுமார் ரூ.5000 கோடி அளவுக்கு நகைக்கடன் தள்ளுபடி நான்கே நாட்களில் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். பெண்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் பொருட்டு ‘மகளிர் சுய உதவிக் குழுக்களை’ கடந்த 1989-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் தொடங்கினார் அம்மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெற்ற கடன்களுக்கு நாட்டிலேயே இதுவரை எம்மாநிலத்திலும் கண்டிராத வண்ணம் சுமார் ரூ.2755 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி சுமார் ரூ.12000 கோடி அளவுக்கு முந்தைய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடியினை, முதல்வர் தனது ஆட்சியில் நிறைவேற்றி உள்ளார். இந்த அரசு தொழிலாளர்களுக்கான அரசு என்று குறிப்பிட்ட அமைச்சர்கள், கூட்டுறவு ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட அரசு ஊழியர்களுக்கு நிகராக ஊதியம் மற்றும் ரூ.28 அகவிலைப்படி, முதல்வர் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். அமைச்சர் மக்களுக்கு முன்னின்று சேவை ஆற்றும் நியாயவிலை கடைகள், மருந்தகங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் அமைக்க தனது சட்டமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை அளித்த ஆயிரம் விளக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் என்.எழிலனைப் பாராட்டி பேசினார். கூட்டுறவுத் துறையின் அரசு முதன்மை செயலர் மற்றும் பதிவாளர் ஆகியோரின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார். கூட்டுறவுத் துறையானது இன்னும் பல சாதனைகளை புரிந்து, முதல்வரின் எண்ணமான தமிழ்நாட்டினை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல தனது பங்களிப்பினை இந்தத் துறை நல்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.பின்னர் அமைச்சர் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் பணியாளர் டி.திலகவதி, 21.04.2021 காலமானதை தொடர்ந்து அவரது மூத்த மகன் பிராசாந்த்-க்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார். மேலும், நியாயவிலைக் கடைகள் மற்றும் இதர கிளைகளில் சிறப்பாக பணிபுரிந்து விற்பனை செய்த சிறந்த பணியாளர்களுக்கு அமைச்சர் திருக்கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. காமதேனு திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முன்பதிவு செய்த ஐந்து நபர்களுக்கு ரசீதுகளை வழங்கினார். இவ்விழாவில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலர் மருத்துவர் இராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அ.சங்கர், ஆயிரம் விளக்கு சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர்.என்.எழிலன், மே.சிற்றரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….
The post தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் அமைச்சர் ஐ.பெரியசாமி appeared first on Dinakaran.