நாராயணனை காண நாற்பது ஆண்டுகள் தவம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர்

நகரேஷூ காஞ்சி என்று சிறப்புடன் வரலாற்றில் காஞ்சிபுரத்தை குறிப்பிடுகின்றனர். இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத் தலங்களில் உலகப்புகழ் பெற்றது வரதராஜப் பெருமாள் கோயில். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் விசேஷம் இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள் நடைபெற உள்ளது.  

ஜூலை 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், ஜூலை 25ம் தேதிமுதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நின்ற கோலத்திலும் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வைபவம் தொடங்கிய நாள்முதல் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக ஜூன் 28ம் தேதி அதிகாலை 2.40 மணியளவில் அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் வெளியில் எழுந்தருளினார்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த 1979ம் ஆண்டு நடைபெற்ற அத்தி வரதர் வைபவத்தில் கலந்துகொண்ட மூத்த அர்ச்சகர்கள், கோயில் மணியம், இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் ஒரு சிலர், சாமி தூக்கும் கோடியக்காரர் எனப்படும் ஊழியர்கள் என 35 முதல் 40 நபர்களே இதில் பங்கேற்றனர். இதில் நானும் ஒருவனாக பங்கேற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதனைத்தொடர்ந்து ஆதி அத்திவரதர் சிலை சுத்தம் செய்யப்பட்டு, லகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஹோமம் வளர்த்து திருமஞ்சனம், விஸ்வரூபம், அலங்காரம் ஹோமம் வனத்து உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு ஜூலை 1ம் தேதி முதல் வசந்த மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தினமும் பச்சை, நீலம், இளஞ்சிவப்பு, காவி, வெண்மை உள்ளிட்ட பட்டாடைகளில் பல வண்ணங்களில் பக்தர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வரம் தரும் மாமணியாக வாருங்கள் வாருங்கள் என பக்தர்களை அழைக்கிறார். அத்தி வரதரை, கடந்த 15 நாட்களில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆகவே 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு அனைவரும் அத்தி வரதரை தரிசனம் செய்யவேண்டும் என்பதற்காகவே கடந்தகாலத்தில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

எல்லோரும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதரை தரிசனம் செய்து பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும் என்பதற்காகவே இந்த தரிசன வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நான் இரண்டு முறை அத்தி வரதரை தரிசித்துள்ளேன். வரதனின் அருளால் மூன்றாவது முறையாக இப்போது தரிசிக்கிறேன். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவத்தை வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்து அருளினை பெற்றுச்செல்வீர் என்று அன்போடு அழைக்கிறோம்.

K. சம்பத்குமார பட்டர்

Related Stories: