யூரோ 2022 மகளிர் கால்பந்து 8-0 என்ற கோல் கணக்கில் நார்வேயை வீழ்த்தியது இங்கிலாந்து

லண்டன்: யூரோ 2022 மகளிர் கால்பந்து தொடரில் நார்வே அணியை 8-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தியது. இங்கிலாந்து அணியின் முன்கள வீராங்கனை பெத் மெட் 3 கோல்கள் அடித்து, ஹாட்ரிக் சாதனை படைத்தார். இங்கிலாந்தின் சசக்ஸ் நகரில் இன்று காலை நடந்த இப்போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து-நார்வே அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். 12வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. ‘ரைட் விங்’கில் ஆடிய ஜார்ஜியா ஸ்டான்வே, அந்த வாய்ப்பை பயன்படுத்தி கச்சிதமாக கோல் அடித்து, அணியின் கணக்கை துவக்கினார். 15வது நிமிடத்தில் லாரென் ஹெம்ப், அட்டகாசமாக ஒரு ஃபீல்டு கோல் அடித்தார். தொடர்ந்து எல்லன் ஒயிட் 2 கோல்களும், அணியின் முன்கள வீராங்கனை பெத் மெட் 2 கோல்களையும் அடிக்க, இடைவேளையின் போது இங்கிலாந்து 6-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.இரண்டாம் பாதியில் அலசியா ருஸ்சோ ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் பெத் மெட், மீண்டும் ஒரு கோல் அடித்து, இப்போட்டியில் ஹாட்ரிக் சாதனையை படைத்தார். நார்வே அணியின் வீராங்கனைகள், இங்கிலாந்தின் அதிரடி தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் மொத்தமாக சரணடைந்து விட்டனர். இறுதியில் 8-0 என்ற கணக்கில் நார்வேயை வீழ்த்தி, இப்போட்டியில் இங்கிலாந்து, தனது அதிரடியான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு யூரோ 2022 மகளிர் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.இங்கிலாந்து அணியின் கேப்டன் லே வில்லியம்சன் கூறுகையில், ‘‘முதல் போட்டியில் ஆஸ்திரியாவை எதிர்த்து நாங்கள் சரியாக விளையாடவில்லை. இருப்பினும் அப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றோம். அதில் எங்களுக்கு திருப்தியில்லை. நார்வே அணிக்கு எதிரான இப்போட்டி எங்களுக்கு மனநிறைவை அளித்துள்ளது’’ என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்….

The post யூரோ 2022 மகளிர் கால்பந்து 8-0 என்ற கோல் கணக்கில் நார்வேயை வீழ்த்தியது இங்கிலாந்து appeared first on Dinakaran.

Related Stories: