தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் காவலர்களுக்கு விரைவில் பணி; டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சென்னை: தமிழக காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு தாமரைப்பாக்கம், வெங்கல், சீத்தஞ்சேரி, புல்லரம்பாக்கம் வழியாக திருவள்ளூருக்கு 60 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வருகை தந்தார். வழியில் வெங்கல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள பிரச்னைகள் குறித்தும், காவலர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனையடுத்து சீத்தஞ்சேரி அடுத்த அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு காப்பகத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஆண்கள்  காவலர் பயிற்சி மையத்தையும் கனகவல்லிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் காவல் பயிற்சி மையத்தை ஆய்வு செய்தார். அப்போது டிஜிபி சைலேந்திரபாபு காவலர் பயிற்சி மையத்தில் மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு பயிற்சிகள் குறித்தும் குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா எனவும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது, `தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் காவலர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 186 ஆண் காவலர்களில் பெரும்பாலும் செங்கல்பட்டு ராணிபேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 7 மாத பயிற்சியில் தற்போது நான்கு மாதங்கள் முடிவடைந்துள்ளது. இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான ஆய்வுக்காக வந்திருக்கிறேன். பயிற்சியில் அனைத்து காவலர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அனைவருமே பட்டதாரி காவலர்கள். இதில் 30 சதவீதம் காவலர்கள் பொறியியல் படித்துள்ளனர். முதுநிலை பட்டதாரிகளும்  முன்னாள் ராணுவ வீரர்களும் உள்ளனர்.  தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் பேரும் பயிற்சி எடுப்பது இதுவே முதன் முறை. ஆயுதபடை போலீஸ், சிறப்பு பிரிவு, உள்ளூர் காவல் துறை என காவல் பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த பத்தாயிரம் பேரும் பணிக்கு வரும்போது காவல்துறை இளமையான காவல்துறையாக காட்சியளிக்கும். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கலால் மற்றும் போக்குவரத்து துறையில் வரவிருக்கும் பத்தாயிரம் காவலர்கள் அதில் பணியமர்த்தப்படுவார்கள்’ என தெரிவித்தார்.  இந்த ஆய்வின்போது திருவள்ளூர் காவலர் பயிற்சி மைய முதல்வரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருான பகேர்லா செபாஸ் கல்யாண், டிஎஸ்பி அனுமந்தன், இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடன் இருந்தனர்….

The post தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் காவலர்களுக்கு விரைவில் பணி; டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: