அன்னம் பாலித்த அம்பிகை

பிரளய நீரை ஒற்றி எடுத்து நான்முகனுக்கு ஈசன் உதவி அருளிய தலமாதலால் திருவொற்றியூர் ஆயிற்று. சுந்தரருக்கு மகிழ மரத்தடியில் இறைவனே காதலுக்குத் தூது சென்று சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்வித்த தலம். கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு திருவருள் புரிந்த வட்டப்பாறை அம்மன், வரப்ரசாதியாய் இத்தலத்தில் தனி சந்நதி கொண்டுள்ளாள். கம்பன் கவியெழுதியபோது அவருக்கு ஒளிகிடைக்க தீப்பந்தம் ஏந்தி சேவை செய்த தேவி இவள். மூலவர் படம்பக்கநாதர் எனும் புற்றிடங்கொண்டாரின் சந்நதி ஆண்டு முழுதும் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள் மட்டுமே கவசமில்லாது தரிசனமளிக்கும். ஈசன், ஆதிபுரீஸ்வரர் எனவும் வணங்கப்படுகிறார். இத்தலத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் அதிபதிகளாய் 27 நட்சத்திர லிங்கங்களை பிராகாரத்தில் தரிசிக்கலாம். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஓருருவம் கொண்ட ஏகபாத மூர்த்தியை இத்தலத்தில் காணலாம். அம்பிகை வடிவுடையம்மனுக்கு கேரள நம்பூதிரிகளால் இங்கே பூஜை செய்யப்படுவது சிறப்பு.

Advertising
Advertising

வள்ளலாருக்கு அவர் அண்ணியைப் போன்ற தோற்றத்தில் தோன்றி நேரில் உணவளித்த தேவி இத்தல வடிவுடையம்மன். தல தீர்த்தமாக பிரம்மதீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்த நீரை தலையில் தெளித்தாலே மிகவும் புண்ணியம் என்று நம்பப்படுகிறது. இத்தலத்தில் தியாகராஜர் எனும் பெயரில் நடராஜப் பெருமான் அமர்ந்த நிலையில் அஜபா நடனமாடுகிறார். பட்டினத்தார் ஜீவசமாதி அடைந்த தலம். வரிவிலக்கு மாந்தாதான் எனும் மன்னன் தனக்கு இறப்பு நேராததால் பாவம் செய்தாவது இறக்கலாம் என எண்ணி தனது ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்களுக்கு அநியாய வரி விதித்தான். ஈசன் அந்த மன்னன் அறியாமல் ஒற்றியூர் நீங்கலாக என எழுதி அம்மன்னனை ஆட்கொண்டார். மாசி மகத்தன்று இத்தலத்தில் தியாகராஜரின் 18 வகை திருநடனங்களையும் கண்டு களிக்கலாம்.

பௌர்ணமி அன்று ஒரே நாளில் மேலூரிலுள்ள திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் மூவரையும் வணங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த வடிவுடை அம்மனைப் பற்றிய வடிவுடை மாணிக்கமாலை எனும் துதி புகழ் பெற்றது. உற்சவ வடிவுடையம்மன், சுக்கிரவார அம்மன் என்று போற்றப்படுகிறாள். விளக்கேற்றி சிவகைங்கரியம் செய்து வந்த கலியநாயனார் ஒருமுறை விளக்கேற்ற எண்ணெய் இல்லாமல் தன் ரத்தத்தையே எண்ணெயாக்கத் துணிந்த போது இத்தல ஈசன் அவரை தடுத்தாட்கொண்ட தலம் இது. ஆலயத்திற்கு வெளியே உள்ள மண்டபத்திற்கருகில் தனிக்கோயிலில் மிகப் பெரிய தட்சிணாமூர்த்தியை வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் திருக்கோலத்தில் தரிசிக்கலாம். சென்னைக்கு வடக்கே 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவொற்றியூர்.

Related Stories: