தீர்வை நோக்கி நகருங்கள்

மரபின் மைந்தன் முத்தையா

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 19

மனிதன் கட்டற்ற சுதந்திரம் கொண்டவனா அல்லது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவனா? என்ற கேள்வியை என்னிடம் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கு நான் இப்படி பதில் சொன்னேன். மனிதன் என்பவன் தன்னை கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக் கொள்கிற சுதந்திரம் கொண்டவன் என்று.  ஏதோ ஒன்றின் கண்காணிப்பின் கீழ் நாம் இருக்கிறோம் என்னும் எண்ணம் எல்லோருக்குமே தேவை. குறிப்பாக நம்மைவிட பெரிய சக்தி ஒன்றின் கண்காணிப்பில் இருக்கிறோம் என்னும் எண்ணம் வந்தால் அது பய உணர்வு அல்ல. பாதுகாப்பு உணர்வு. தாயின் கைப்பிடிக்குள் தன் பிஞ்சுக் கரம் பதித்து நடக்கும் குழந்தை எப்படி பாதுகாப்பாக உணர்கிறதோ அதுபோல தெய்வத்தின் கை பிடித்துக் கொண்டு வாழ்வில் நடக்கிறோம் என்னும் போது பக்தி உணர்வும் பத்திர உணவும் ஒன்றாகவே உருவாக காண்கிறோம்.

எல்லையற்ற கட்டுப்பாட்டைப் போலவே எல்லையற்ற சுதந்திரம் ஒரு வகையான சுமையாகத்தான் கருதப்படும். ஏனெனில் மனிதன் சில நேரம் உணர்ச்சியின் பிடியில் இருக்கிறான். சில நேரம் அழிவின் பிடியில் இருக்கிறான். சில நேரம் கலவை உணர்வுகளில் தவிக்கிறான். தன்னை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்று கருதுவது சுதந்திரம் அல்ல. தனக்கான கண்காணிப்பையும் கட்டுப்பாட்டையும் தானே உருவாக்கிக்கொள்வது தான் உயர்ந்த சுதந்திரம். அத்தகைய குணநலனுக்கு அனுமன் ஓர் அடையாளம். உடல் வலிமை, உள்ளத்தின் வலிமை அறிவின் வலிமை ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒப்பற்ற அடையாளமே அனுமன். தான் மேற்கொண்ட லட்சியத்திற்காக எந்த நேரத்திலும் எந்த செயலையும் செய்து முடிப்பதற்கான தயார் நிலையில் இருப்பது அனுமன் இயல்புகளில் ஒன்று. ஒரு சிறந்த பணியை செய்து முடிக்க எப்போதும் தயாராக இருப்பதுதான் சுதந்திரத்தின் சுய அடையாளம்.

இறைவனுடைய பொறுப்புணர்வு அவருடைய எல்லையில்லாத சுதந்திரத்தில் இருந்து உருவாகிறது. எப்போதெல்லாம் நல்லவர்கள் துன்புறுகிறார்களோ அப்போதெல்லாம் தீயவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்த பூமியில் தோன்றுவேன் என்று இறைவன் சொல்வது எல்லையற்ற சுதந்திரத்துக்கும் அடையாளம். எல்லையற்ற பொறுப்புணர்வுக்கும் அடையாளம்.அன்றாட வாழ்க்கையில் கூட குறிப்பிட்ட வேலைகளை உரிய நேரத்திற்குள் செய்து முடிக்க யாரிடம் திறமையும் பொறுப்புணர்வும் இருக்கிறதோ அவர்கள் விரும்பிய நேரத்தில் வேலை செய்யும் தகுதியை பெற்றவர்கள் ஆகிறார்கள்.

வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு வேலையை செய்து முடிக்க இயலாதவர்கள் எட்டு மணி நேரம் செக்குமாடு போல சுற்றி சுற்றி வந்தாலும் யாருக்கும் எந்த பயனும் இல்லை. ஒரு செயலை மேற்கொள்கின்ற போது பொறுப்புணர்வோடு அதனை செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்து முடிக்க  எவையெல்லாம் தடையாக இருக்கும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்.கூட்டாக ஒரு பொறுப்பை நிறைவேற்றுகிற நேரத்தில் யார் பெரியவர் என்கிற அகங்காரம் அந்த வேலையை சரியாக செய்யவிடாமல் தடுப்பதோடு தடையையும் தீமையையும் ஏற்படுத்திவிடும். இதுபற்றி துரியோதனனுக்கு விதுரன் சொல்வதாக மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு.ஒரு வேடன் இரண்டு பறவைகள் ஒரே இடத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்து அவற்றை பிடிப்பதற்காக தன்னுடைய வலையை  வீசினான். இரண்டு பறவைகளும் அந்த வலையைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறக்கத் தொடங்கிவிட்டன. உடனே அந்த வேடன் அந்தப் பறவைகள் பறக்கும் திசையிலேயே ஓடத் தொடங்கினான்.

வழியில் ஒருவர் நிறுத்தி ஏன் ஓடுகிறாய் என்று கேட்டார். அவன் விவரம் சொன்னான். மேலே பறக்கின்ற பறவைகளின் திசையில் நீ ஓடுவதால் உனக்கு என்ன பயன் என்று கேட்ட போது, அவற்றுக்குள் ஒற்றுமை இல்லாத போது என் கைக்கு வரும் என்று பதில் சொன்னான். அவன் சொன்னதைப் போலவே சிறிது தூரம் நடந்த பிறகு ஒரு பறவை கிழக்கு நோக்கி பறக்க முயல, இன்னொரு பறவை மேற்கு நோக்கி பறக்க முயன்றது. இரண்டுக்கும் சண்டை வந்து ஒன்றுடன் ஒன்று மோதி கீழே விழுந்தன. வலையையும் பறவைகளையும் வேடன் கைப்பற்றிக்கொண்டான்.எந்த ஒன்றை செய்தாலும் செயலில் ஈடுபட்டிருப்பவர்கள் நடுவே ஒத்த சிந்தனையும், ஒற்றுமையும் நீண்டகால தொலைநோக்கும் இருந்தால் செய்கிற செயல் சிறக்கும். கூட்டாக தொழில் தொடங்குவது பலரும் முயற்சி செய்வதுதான். ஆனால் அதில் வெற்றி சிலருக்கு மட்டுமே வருகிறது. இரண்டு பேர் இணைந்து தொழில் செய்தால் அதில் ஒவ்வொருவரும் தங்களுடைய செயல் திறனை வெளிப்படுத்தி சமமான உழைப்பையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினால் சிக்கல்கள் ஏற்பட வழியில்லை. தொழிலில் வெற்றி வேண்டி உழைக்கக்கூடிய கூட்டாளிகள் நடுவே அகங்காரம் தலையெடுக்கும் போதுதான் அது தொழிலின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கிறது.

கூட்டுத் தொழில் கூட்டு குடும்பம் என எல்லாவற்றுக்குமே இது பொருந்தும். பாரத தேசத்தைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தொழில் தொடங்குவது என்பது இயல்பான ஒன்று. அவற்றில் பெரும் வெற்றியை எட்டக்கூடிய நிறுவனங்கள் குறைவு. ஏனெனில் ஒரு குடும்பத்திற்குள் இயல்பாக வந்து போகக்கூடிய பூசல்கள் கருத்து வேறுபாடுகள் விரிசல்கள் எல்லாம் தொழிலிலும் எதிரொலிக்கத் தொடங்கும்போது இந்த பிரச்னை பெரிதாகும். ஒரு முறை கேசினி என்ற இளவரசியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள விரோசனன் என்கிற அசுரன் வந்தான். அந்த சுயம்வரத்திற்கு சுதன்வா என்ற அந்தண இளைஞரும் வந்திருந்தார். அங்கிருந்த தங்க சிம்மாசனத்தில் தானாகப் போய் அமர்ந்து கொண்டான் விரோசனன். அத்துடன் நில்லாமல் அங்கு வந்த சுதன்வாவுக்கு கேசினி உபசாரம் செய்வதைப் பார்த்து சுதன்வாவை தன்னுடன் ஆசனத்தில் வந்து அமர அழைத்தான்.

சுதன்வா வர மறுத்ததும் அவரை  கேலி செய்தான். இருவர் நடுவிலும் யார் பெரியவர் என்கிற மோதல் ஏற்பட்டது. உடனே சுதன்வா, விரோசனனிடம் “நாம் இருவரும் நம்மில் யார் பெரியவர் என்று உன் தந்தை பிரகலாதனிடமே கேட்கலாம் என்று சொல்லி இருவரும் பிரகலாதனிடம் சென்றனர். அத்தோடு நில்லாமல் நாம் இந்த போட்டியில் நம்முடைய உயிரையே பந்தயமாக வைப்போம் என்றும் சுதன்வா சொல்லியிருந்தார்.நேர்மை தவறாத பிரகலாதன், சுதன்வா எல்லா விதங்களிலும் தன் மகனை விட உயர்ந்தவர் என்பதனை பிரகடனம் செய்து தன் மகன் தோற்றதை ஒப்புக்கொண்டான். அத்தோடு சுதன்வாவிடம் தன் மகனுக்கு உயிர் பிச்சை கேட்க சுதன்வா ஒப்புக்கொண்டதோடு விரோசனை கேசினி மணம் புரியட்டும் என்றும் சொல்லிச் சென்றார்.இங்கே இரண்டு பேர்களில் யார் பெரியவர் என்கிற மோதலை நேர்மையாகவும் கூர்மையாகவும் பிரகலாதன் கையாண்ட காரணத்தால் சிறந்த தீர்வு பிறந்தது.

உறவுகளை சீர் செய்வதாக இருந்தாலும் சரி, வரவுகளை வாணிபத்தில் பெருக்குவதாக இருந்தாலும் சரி அனைத்திற்கும் சரியான சொற்களைப் பேசுவதும் சரியான முடிவுகளை எடுப்பதுமே அடிப்படைத் தேவைகளாக அமைந்திருக்கின்றன. ஆத்திரத்தாலும் அவசரத்தாலும் பேசிய சொற்கள் காலம் கடந்து விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்போது பின்னால் வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை. மாறாக நிதானித்துப் பேசுவதும் நல்லதைப்  பேசுவதும் நீண்டகால அடிப்படையில் பலன் தரக்கூடியவை. நிர்வாகத்தில் ஒரு தவறு நடக்கும்போது அதுகுறித்து விசாரிப்பது இயல்பு. அந்த உரையாடல் ஏற்பட்ட சிக்கலின் காரணத்தை உணர்ந்து தீர்வையும் கண்டடையும் நோக்கத்தில் இருக்க வேண்டுமே தவிர சிக்கலை பெரிதாக்குகின்ற போக்கிலோ நோக்கிலோ உரையாடல் அமையக்கூடாது.

தமிழக அளவில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஓர் உயர் அலுவலரின் அறையில் அமர்ந்திருந்தபோது அவரிடம் முறையிட இரண்டு அலுவலர்கள் உள்ளே  வந்தார்கள். அவர்கள் இருவர் இடையிலும் பெரும் மோதல் ஏற்பட்டிருந்தது. வந்தமர்ந்த முதல் 10 நிமிடங்கள் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குற்றப்பத்திரிகை வாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். பதினோராவது நிமிடம் அந்த உயர் அலுவலர் தெளிவாகச் சொன்னார்,” இந்த நாற்காலியில் நான்  அமர்ந்து இருப்பது ஒரு சிக்கல் வருகிறபோது அதை எப்படி சீர்செய்து அடுத்த நிலைக்கு வேலையை கொண்டு போகலாம் என்று பார்ப்பதற்கு தானே தவிர உங்கள் இருவரின் மோதல்களில் கதையை கேட்பதற்கல்ல. உங்கள் விரிசல்களை சரி செய்வது என் வேலை இல்லை. வேலை சரியாக நடக்கிறதா என்பதில்தான் என் அக்கறை”.

இப்படி சொன்னதும் அதுவரை புலியாக பாய்ந்து கொண்டு இருந்த அலுவலர்கள் இருவரும் பூனையாக பதுங்கி வேலை சார்ந்த அறிக்கையை அவரவர் நிலைப்பாட்டிலிருந்து சமர்ப்பித்துவிட்டு எழுந்து போய்விட்டார்கள். இதை இங்கே குறிப்பிட காரணம் நாம் எந்த நிலையில் இருந்தாலும் கூட நமக்கு கதை கேட்பதிலோர் ஆர்வம் உருவாகவே  செய்யும். குறிப்பாக பிரச்னையில் சம்பந்தப்பட்ட இருவரும் இணைந்து ஒரு முறையீட்டை முன்வைக்கிறார்கள் என்றார் அந்த சண்டையை செவிமடுக்க எல்லோருக்குமே ஆர்வம்  தோன்றும்.

ஆனால் நிர்வாகியாக இருப்பவர்கள் நடக்கவேண்டிய வேலைக்கு என்ன விவரங்கள் தேவையோ அதை மட்டும் கேட்பவர்களாக இருந்து கொண்டு தேவையற்ற விவாதங்களை தவிர்க்க முற்படும்போது சம்பந்தப்பட்டவர்களும் வேண்டாத விஷயங்களைப் பேசி விவகாரத்தை திசை திருப்ப முற்படமாட்டார்கள். நம்முடைய சலனங்களையும் கட்டுப்படுத்திக்கொண்டு நம்மிடம் வேலை பார்ப்பவர்களை வேண்டாத திசையிலிருந்து விலக்கி விவாதத்தை சரியான திசையில் கொண்டு செலுத்துவது என்பது கட்டுக்கடங்காத காட்டு குதிரைக்கு கடிவாளம் போட்டு அதை நேர்பாதையில் கொண்டு செலுத்துவதைப் போல ஆகும்.குதிரை வீரர்கள்  வெல்வதெல்லாம் கடிவாளத்தை சரியாக கையாளும் முறையில் தான்.

(தொடரும்)

Related Stories: