சூன்யத்தை வேரறுத்த சுப்ரமணியர்

ஆதிசங்கர பகவத்பாதர் அறுவகைச் சமயங்களை ஒன்றாக்கி நிலைபெறச் செய்ய முயன்றபோது, அபநவ குப்தன் என்பவர் அவர் மீது சூன்ய  மந்திரங்களை ஏவி அவருக்குக் காசநோயை உண்டு பண்ணினான். அதனால் வருந்தி இருக்கும் வேளையில் அவருடைய கனவில் முருகன் தோன்றித்  திருச்செந்தூருக்கு வரும்படி ஆணையிட்டார். அதன்படியே, அவர் முருகனைத் தரிசித்துப் பற்றிநிற்கும் நோயினின்று குணம் பெற எண்ணித்  திருச்செந்தூரினை அடைந்தார். அவர் கோயிலுக்குள் சென்றபோது திருச்செந்தூர் முருகனை ஆதிசேஷன் வழிபட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான். அவர்,  அவன் வந்ததை நல்ல சகுனமாகவும், அவன் சரசர வென்று செல்லும் ஒலியைச் சந்தமாகவும் ஏற்றுக்கொண்டு முருகன்மீது , ‘‘சுப்பிரமணிய  புஜங்கம்’’ எனும் நூலைப் பாடினார்.

வடமொழியில் புஜங்கம் என்பதற்குப் பாம்பு என்பது பொருள். பாம்பு போன்று வளைந்து வளைந்து வெகுவேகமாகச் செல்லும் நிலையில் அமைந்த  சத்தத்துடன் பாடிய பாடலே இங்கு புஜங்கம் எனப்பட்டது. இதனைப் பாடிமுடித்த அளவில் அவருடைய நோய் தீர்ந்து விட்டது என்பர். இது 33  பாடல்களைக் கொண்டதாகும். இந்நூலில் திருச்செந்தூர் குமரனின் பன்னீர் இலை விபூதியின் மகிமையைப் பற்றிப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.இதில் சங்கரர் ஆறுமுகப் பெருமான் தன்னுள்ளத்தில் எழுந்தருளியிருந்து உலகம் உய்ய இதனைப் பாடியருளினான் என்று கூறுகின்றார். இதனை  அடியொட்டி பின்னாளில் இதே சந்தத்தில் கணேச புஜங்கம் முதலான நூல்களும் பாடப்பெற்றதென்பர்.

 - ஆ. அன்னவயல்

Related Stories: