பழநி மாரியம்மன் கோயில் திருக்கல்யாண கோலாகலம்

பழநி: பழநி மாரியம்மன் கோயிலின் மாசி திருவிழாயொட்டி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தேரோட்டம் நடக்கிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் 39 உபகோயில்கள் உள்ளன. இதில் பழநி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இதற்கு பழநி நகர் பகுதியிலிருந்து மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர். இந்தாண்டு திருவிழா கடந்த 1ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. கம்பம் சாட்டுதல் 5ம் தேதி நடந்தது. கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் கடந்த 12ம் தேதி நடந்தது.

Advertising
Advertising

முக்கியமான நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றிரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கன்யா லக்னத்தில் உற்சவர் திருக்கல்யாணமும், மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. நாளை இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் அம்மன் தங்கமயில், புதுச்சேரி சப்பரம், சிம்ம வாகனம், வெள்ளியானை, தங்கக்குதிரை, வெள்ளி ரிஷபம், தந்தப்பல்லக்கு, வெள்ளிகாமதேனு வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Related Stories: