நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட், ஸ்ரீரஞ்சனி தம்பதி, தங்கள் மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல், நன்கு படிக்க வைத்து, அரசாங்க அதிகாரியாக்க ஆசைப்படுகின்றனர். அதன்படி கதிர் நன்கு படித்து அதிகாரியாகி, பணக்கார வீட்டுப் பெண் சூசனை திருமணம் செய்து, சென்னையில் சொந்த வீடு கட்டி மகனுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், சூசனின் அலட்சியத்தால் போஸ் வெங்கட், ஸ்ரீரஞ்சனி தம்பதி அவமானப்படுகின்றனர். நகர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட அவர்கள், தங்கள் மகனின் நலனுக்காக பூர்வீக சொத்துகளை இழக்கின்றனர். தனது பூர்வீகத்தை மறந்த கதிர், மனைவியை மீறி திருந்தினாரா? போஸ் வெங்கட், ஸ்ரீரஞ்சனி தம்பதி என்ன ஆனார்கள் என்பது மீதி கதை.
இரட்டை வேடங்களில் கதிர் சிறப்பாக நடித்துள்ளார். மியாஸ்ரீ, கவனத்தை ஈர்க்கிறார். போஸ் வெங்கட், ஸ்ரீரஞ்சனிக்கு இப்படம் ஒரு மைல் கல். சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், ‘பசங்க’ சிவகுமார் நடிப்பில் இயல்பு. விஜய் மோகன் கேமரா யதார்த்தமாகப் பதிவு செய்துள்ளது. சாணக்யா இசையில் பாடல்கள் கிராமத்து மண் வாசனை. ஜி.கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். என்னதான் நகரத்து வாழ்க்கை சொகுசாக இருந்தாலும், பூர்வீக வாழ்க்கைதான் சுகமானது என்ற கருத்தை பிரசார வாடையின்றி சொன்ன அவர், விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று முன்கூட்டியே கணிக்க முடிவது சற்று மைனஸ்.