கவலைகள் தீர்க்கும் திருவாலங்காடு காளி

திருவாலங்காடு

Advertising
Advertising

தமிழக சக்தி பீடங்கள்

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், அம்பிகை வண்டார்குழலி. சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருட்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் ஐம்பெரும் அம்பலங்களில் ரத்தின சபை ஆகும். இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்கப் பெற்ற காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து வந்து நடராஜரின் திருவடியின் கீழிருந்து, ஈசனின் ஆனந்த இன்ப வெள்ளத்தில் திளைத்திருக்கும் திருக்கோயில் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காளி பீடம்.

தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்’ என்று துவங்கும் பழனி திருப்புகழ் பாடலில் “மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை’ என்ற அடிகளில் திருவாலங்காட்டில் சிவபெருமான் ஆடிய போட்டி நடனத்தில் காளியை தோற்கடித்த வரலாற்றை அருணகிரிநாதர் தெரிவிக்கிறார். இதனிடையே நிசும்பன், சும்பன் என்று இரண்டு அரக்கர்கள். இவர்களிடையே தேவர்களுக்கு அதிகம் துன்பம் விளைவிப்பர் யார் என்று ஒரு போட்டி! இருவரும் ஒருவரையொருவர் மிஞ்சும் விதத்தில் தேவர்களைப் போட்டு புரட்டி எடுத்து விட்டனர்.

அவர்கள் உடனே விழுந்தடித்துக் கொண்டு ஓடி பராசக்தியிடம் சரணடைந்தார்கள். “”உங்களைத் துன்புறுத்தும் அசுரர்களை ஒழிப்பேன். கவலை வேண்டாம்’’ என்று தேவர்களுக்கு தைரியம் தந்து அந்த அசுரர்கள் வசிக்கும் மலை அடிவாரத்தில் தவவேடத்தில் வந்தமர்ந்தாள். அப்போது சண்டன், முண்டன் என்ற இரு அரக்கர்கள், அம்பிகையின் தவக்கோலத்தையும் மீறி பிரகாசித்த அழகில் மயங்கி துர் எண்ணத்துடன் தேவியை அணுகினர். தேவி சிறிது சினம் காட்ட அவள் தோளிலிருந்து ஒரு சக்தியும் அனேகப் படைகளும் தோன்றி சண்டன் முண்டனை துவம்சம் செய்தனர். “சண்டனையும் முண்டனையும் கொன்றதால் உனக்கு இன்று முதல் “சாமுண்டி”என்று பெயர்.

உலகோர் உன்னை வணங்குவார்கள்’’ என்று தன் தோளிலிருந்து தோன்றிய சக்தி தேவதைக்கு அருட்பாலித்தாள் உமையம்மை. சண்டன் முண்டனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு வெகுண்டு தேவியுடன் நேருக்கு நேராய்ப் போராட ஏராளமான அசுர சேனைகளுடன் நிசும்பனும் சும்பனும் வந்தனர். ஆனால் தேவியின் உடலில் இருந்து வெளிக்கிளம்பிய சப்த மாதர்களும் சிவகணங்களும் அந்த அசுரர்களையும் அவர்களது சேனைகளையும் தவிடு பொடியாக்கினர்!

நிசும்ப, சும்பர்களுக்கு ஒரு தங்கை! குரோதி என்பது அவள் பெயர். அவளுக்கு ரத்தபீஜன் என்று ஒரு பிள்ளை. மகா கொடூரமானவன். தன் மாமன்மார்களைக் கொன்றவர்களைப் பழி தீர்த்தே தீருவேன் என்று பெரும் அசுர சேனையுடன் வந்தான். சப்தமாதர் படை அவனுடன் போரிட்டது. ஆனால் அவனை அவர்களால் வெல்ல முடியவில்லை. காரணம் அவன் பெற்றிருந்த ஒரு விசித்திரமான வரம்! அதன்படி ரத்தபீஜன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் பூமியில் சிந்தினாலும் அந்த ரத்தத்திலிருந்து ஆயிரம் அசுரர்கள் தோன்றி அவனுக்குத் துணையாகப் போராடுவார்கள்!

ரத்தபீஜனை வெட்டவெட்ட அவன் உடலிலிருந்து ரத்தம் வழிந்து பூமியில் சொட்ட, ஆயிரம் ஆயிரமாய் லட்சக்கணக்கில் அசுரர்கள் தோன்றி சப்தமாதர் படைகளை துவம்சம் செய்தனர்! இந்த அதிசயத்தை தேவியிடம் ஓடிச்சென்று சப்தமாதர் சொல்ல, அம்பிகை வெகுண்டு எழுந்தாள். உடனே தன் தோளிலிருந்து மகா உக்கிரம் பொருந்திய காளியைத் தோற்றுவித்து “ஏ காளி! நான் இப்போது நேரில் சென்று அந்த ரத்தபீஜனை வெட்டி சாய்க்கப் போகிறேன்.

அப்போது அவன் உடலிலிருந்து வெளிப்படும் ரத்தம் துளிக்கூட பூமியில் சிந்தாமல் உன் கைகளை கபாலம் போல் குவித்து அதில் ஏந்திக் குடித்து விடு!” என்று ஆணையிட்டுவிட்டுப் போர்க்களம் சென்ற அம்பிகை ரத்தபீஜனை வெட்டுகிறாள். காளி தன் எண்ணற்ற கரங்களில் அவன் ரத்தத்தை ஏந்திப் பருக அவன் மாள்கிறான். தேவர்கள் துன்பம் தொலைந்தது. காளிக்குப் பல வரங்களை அளித்து அவளுக்கு சண்டி என்னும் பெயரிட்டு அழைத்து தேவி மறைந்தாள்.

காளிக்கு இப்போது ஏக உற்சாகம். உமையிடம் பெற்ற வரங்களாலும் ஏராளமாய் அசுரன் ரத்தத்தைக் குடித்ததாலும் அவளுக்குத் தலைகால் புரியவில்லை. மோகினி, டாகினி என்று பல பூதப் பிள்ளைகள் புடை சூழ காடு காடுகளாய் சுற்றி இறுதியில் திருவாலங்காட்டுக்கு அருகில் வந்து தங்கி அனைவரையும் துன்புறுத்திக் கொண்டிருந்தாள். காளியின் இந்த துர்ச்செயல்கள் நாரதர் மூலம் திருமாலுக்கும் திருமால் மூலம் சிவனுக்கும் செல்ல, அவர் காளியின் செருக்கை அடக்கத் திருவாலங்காட்டுக்கு வருகிறார். அவரது போர்க்கோலத்தைக் கண்டு அஞ்சிய காளி போரைத் தவிர்த்து விட்டு சிவனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள்!

காளி நடனத்தில் மகா நிபுணி. அந்தத் தைரியத்தில் சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். நடனம் நடந்தது. இருவரும் மாற்றி மாற்றி தத்தம் திறமையை காட்டினர். சிவன் எப்படி நடனமாடினாலும் காளி அதற்கு பதிலடி கொடுப்பதுபோல் ஆடினாள். அப்பொழுதுதான் சிவபெருமான், திருமால், பிரம்மன் முதலியோர் வாத்தியம் வாசிக்க தனது பிரசித்திப் பெற்ற ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்! தன் காதில் இருந்த மணிக்குழைகளில் ஒன்றைக் கீழே வீழ்த்திப்பின் அதனைத் தன் இடக்கால் பெருவிரலால் எடுத்துக் காலை காதுவரை உயர்த்திக் காதில் பொருத்தினார். இப்படிக் காலை அவ்வளவு தூரம் உயர்த்தி ஆட முடியாத தன் இயலாமையை எண்ணி நாணத்தால் குனிகிறாள் காளி. சுனந்த முனிவரும் கார்கோடகனும் இந்த ஊர்த்துவ தாண்டவத்தைக் கண்ணாரக் கண்டு சிவனை வணங்கினார்கள்.

அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,”என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும், மேலும் அம்பிகையின் சக்திபீடங்களில் இது காளிபீடமாக பிரகாசிக்கட்டும் என்றும் வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு வரப்ரசாதியாய் இத்தலத்தில் அருட்பாலிக்கிறாள். இத்தல காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள “கமலத்தேர்” இங்கு தனி சிறப்பு.

வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் ரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார். திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படும். வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நாட்டியம் இதுவாகும்.

இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும். யாருக்கும் அடங்காத காளி வெட்கித் தலை குனிய வைத்த நடனமான இந்த ஊர்த்துவ தாண்டவ நடனம் பார்த்துப் பரவசமடைய வேண்டியதாகும். ஒருமுறை காளிக்கும், சிவனுக்கும் நடனப் போட்டி நடந்தது.

சிவபெருமானை விட நன்றாக நடனமாடி வந்த காளி கடைசியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் காலை மேலே நேராகத் தூக்கியவுடன் காளியான சக்தி வெட்கித் தலைகுனிந்து தோற்றுப் போனாள். நடராஜர் சந்நதிக்கு எதிரே காளியின் சந்நதி இருக்கிறது. சந்நதிக்கு எதிரே மற்றும் பல விக்கிரகங்கள் இருக்கின்றன.

வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் தரிசனம் செய்தால் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

சென்னை - அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோயில் உள்ளது.

Related Stories: