நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு : செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்ட அலுவலகத்தில் கருப்பு கொடியுடன் விவசாயிகள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, பெரும்புலிமேடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், சிப்காட் விரிவாக்க பணிக்காக சுமார் 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிப்காட் திட்ட அலுவலகம் முன்பு நேற்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்த பகுதிகளை, மீண்டும் கையகப்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதார புன்செய் விளைநிலங்களையும், மேய்ச்சல் பகுதியையும் கையகப்படுத்த முயன்றபோது, முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது. அதனை கனிவுடன் பரிசீலித்து களஆய்வுக்கு அறிவுறுத்தினர்.அதன்பேரில், ஆர்டிஓ, டிஆர்ஓ மற்றும் கலெக்டர் ஆகியோர் பலமுறை நேரடியாக கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். நிறைவாக 10.10.2009 அன்று பெருங்கட்டூர் மருத்துவமனை விழாவில் அப்போதைய உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில், பெரும்புலிமேடு கிராமத்தில் நிலம் கையகப்படுத்துவதை முதல்வர் தள்ளி வைத்திருப்பதாக கலெக்டர் அறிவித்தார்.ஆனால், இதையடுத்து அமைந்த அதிமுக அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, இந்த அறிவிப்பை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தற்போது, அதிகாரிகள் மீண்டும் எங்களது விளைநிலங்களையும், வாழ்வாதார பகுதிகளையும் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனவே, அரசு கருணையுடன் பரிசீலித்து, எங்களது விளைநிலங்களையும், மேய்ச்சல் நிலங்களையும் சிப்காட் விரிவாக்கத்திற்கு கையகப்படுத்துவதில் இருந்து நிரந்தரமாக விடுவித்து வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தொடர்ந்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர். அவர்களிடம், செய்யாறு டிஎஸ்பி செந்தில், தூசி இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு தங்களது கோரிக்கை மனுவை சிப்காட் திட்ட அலுவலர் கலைவாணியிடம் அளித்தனர்….

The post நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-செய்யாறு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: