ராஸாக்கர் – திரைவிமர்சனம்.

சமர்வீர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் குடூர் நாராயணன் தயாரித்து யதா சத்ய நாராயணா இயக்கியுள்ள படம் ரஸாக்கர். பாபி சிம்ஹா, வேதிகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இந்தியா 584 சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்தது. பெரும்பாலான மன்னர்கள் தங்களது ராஜ்ஜியத்தை சுதந்திர இந்தியாவுடன் இணைக்க மறுத்துவிட்டனர். சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லாபாய் படேல், அவரின் செயலாளர் வி. பி மேனன் ஆகியோர் இணைந்து மன்னர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் ராஜ்ஜியத்தை கைவிட வைத்தனர். மற்ற சமஸ்தானங்கள் தங்களது ராஜ்ஜியங்களை இந்தியாவுடன் இணைக்க சம்மதித்துவிட்ட நிலையில், இறுதியாக காஷ்மீர் மற்றும் ஹைதராபாத் மட்டும் தனி சமஸ்தானங்களாக இருந்தன. ஒரு பக்கம் காஷ்மீர் பிரச்சனை பெரிதாகிக் கொண்டே இருக்க, மறுபக்கம் ஹைதராபாத் நிஜாம் தனது ராஜ்ஜியம் கைவிட்டுப் போகாமல் இருக்க கடும் அடக்குமுறைகளை கையாண்டார். பெரும்பான்மையான இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் மதக்கலவரங்கள் வெடித்தன. நிஜாம் அரசு மக்களை கொடூரமாக கொன்றழித்தது.

தலைவாசல் விஜய், பாபி சிம்ஹா, வேதிகா, நடன இயக்குநரும் நடிகருமான ராம்ஜி, ஜான் விஜய், துளசி என தமிழ் நடிகர்கள் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். சர்தார் வல்லபாய் படேலுக்கு அடிப்பணியக் கூடாது என முடிவெடுக்கும் பொழுதாகட்டும், காஸிம் ரஸ்வியை நம்பி ஏமாந்து இந்திய இராணுவத்தின் ‘ஆப்ரேஷன் போலோ’வில் ஹைதராபாத்தை இழந்து கலங்கும் பொழுதாகட்டும், நிஜாம் மிர் ஒஸ்மால் அலி கானாக நடித்துள்ள மகரந்த் தேஷ் பாண்டே கலக்கியுள்ளார். தெலுங்கானாவில் நிலவிய சாதியப் பாகுபாடுகளும், அதன் தொடர்ச்சியாகக் கிளிர்த்தெழுந்த மக்கள் புரட்சியும், அவர்களுக்கு உறுதுணையாக நின்ற ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகளும், நிலப்பிரபுக்களுக்குப் பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளனர். நிலப்பிரபுக்கள், ரஸாக்கர்களின் உதவியை நாடியுள்ளனர். இதையும், கம்யூனிஸ்ட்களைக் காட்டாமல் படத்தில் தொட்டுச் சென்றுள்ளனர். ஆனால், ‘இத்தனை நாள் ரஸாக்கர்களை எதிர்த்த கம்யூனிஸ்ட்கள், இந்திய அரசு ஹைதராபாதிற்கு இராணுவத்தை அனுப்பியதை அறிந்து, ரஸாக்கர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்’ என்று படேலிடம் சொல்லப்படுவதாகப் படத்தில் ஒரு வசனம் மட்டும் வருகிறது.

ஏற்கனவே வெளியாகும் பல படங்கள் இஸ்லாமியர்கள் என்றாலே கெட்டவர்கள், கொடுமையானவர்கள், தீவிரவாதிகள் என சித்தரித்துப் பல படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில் நமக்கு இஸ்லாமியர்கள் இழைந்தக் கொடுமைகளைப் பார்த்தீர்களா என வரலாற்றுச் சான்றுகளை எடுத்து வைப்பது ஒருவித பிரச்சார நோக்கமாகவே தெரிகிறது. அதற்கேற்ப படம் முழுக்க தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள். என்கையில் இப்படியான படங்கள் எல்லாமே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கொடி பிடித்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

முன்பெல்லாம் இஸ்லாமிய மன்னர்களின் அருமை பெருமைகள், அவர்கள் கட்டிய கட்டிடங்கள் வரலாறுகள் என இருக்கும். இன்று பாடப் புத்தகங்கள் உட்பட பழங்கால முகலாய மன்னர்கள் குறித்தக் குறிப்பேடுகள் நீக்கப்பட்டுவிட்டன. என்கையில் தற்போது படங்கள் இந்துத்துவா கோட்பாடுகளையும், இஸ்லாமிய எதிர்ப்புகளையும் பிரச்சாரம் செய்யத் துவங்கிவிட்டன. இந்தியா போன்ற பல மதங்கள், ஜாதிகள் அடங்கிய நாட்டில் இப்படியான படங்கள் தேவைதானா என்கிற கேள்வியே எழுகிறது.

The post ராஸாக்கர் – திரைவிமர்சனம். appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: