கரும்புடன் கந்தன்

பொதுவாக முருகன் ஆலயங்களில் முருகன் வேலுடன்தான் காட்சி தருவார். ஆனால் வலக்கையில் இனிமையான செங்கரும்பை ஏந்தி பாலதண்டாயுதபாணியாக முருகன் அருட்பாலிக்கும் தலம் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் எனும் ஊரில் உள்ளது. இவ்வூரில் உள்ள மலைக்கோயிலில் இந்த அரிய தரிசனத்தைக் காணலாம். 240 படிகளுடன் கூடிய, பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த பாலதண்டாயுதபாணியின் சிரசில் குடுமி உள்ளது. உற்சவ மூர்த்தியோ கையில் செங்கரும்பை ஏந்தியுள்ளார். இவை பிற எந்த முருகன் ஆலயத்திலும் காண

இயலாத அற்புதம்.

இதே தலத்தில் காமாட்சியம்மனுடன் ஏகாம்பரேஸ்வரரும் அருள்கிறார். இத்தலம் முன்னொரு காலத்தில் கடம்பவனமாக இருந்திருக்கிறது. இந்தக் கடம்பவனத்தில் சிவபூஜை செய்த முனிவர்களை அசுரர்கள் துன்புறுத்த, அவர்கள் முருகனிடம் சென்று அசுரர்களின் கொடுமையைச் சொல்லி முறையிட்டனர். உடனே அந்த அசுரர்களை வதைக்கும் எண்ணம் கொண்ட தண்டாயுதபாணி, அதற்குத் தன் அன்னை காமாட்சியிடம் அனுமதி வேண்டினார். தாயும், தன் கையிலிருந்த கரும்பினை ஆசிர்வாதமாக அளித்து மகனை ஊக்குவித்தாராம். அன்று முதல் முருகன் இத்தலத்தில் கரும்பை ஏந்தி பக்தர்களுக்கு வரங்கள் பல தந்துகொண்டிருக்கிறார்.

மலையிலிருக்கும் முருகனுக்கு நேர் எதிரே அவர் தன் தாய் தந்தையரைப் பார்க்கும் கோணத்தில், கீழே ஊருக்குள், காமாட்சியம்மை சமேத ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு குலசேகரபாண்டியன் என்ற மன்னனால் குன்றின் மீது கட்டப்பட்டது. வடபழநி என்றழைக்கப்படும் செட்டிக்குளம் மலையின் மேல் உள்ள பாலதண்டாயுதபாணி மூலவர் சற்றே முகம் சாய்த்தபடி காட்சியளிக்கிறார். இது அவர் நேர் எதிரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியம்மனை தரிசித்து வணங்கும் பாவனையாகத் தெரிகிறது.

தனயன் தன் தாய் தந்தையரை பார்த்தபடியும், பெற்றோர் தன் குழந்தையை பாசத்துடன் கவனித்தபடியும் தனித்தனியே இரு கோயில்களைக் கொண்டிருக்கும் இதுபோன்ற தலம் வேறு இருக்குமா என்பது தெரியவில்லை. ஒரு சித்திரை மாதப் பிறப்பன்று முருகன் வளையல் விற்கும் செட்டிகுல வணிகருக்கு ஆண்டிக்கோலத்தில் திருக்காட்சி கொடுத்தபடியால் இவ்வூருக்கு செட்டிக்குளம் என்ற பெயர் ஏற்பட்டது. முருகன் கையில் கரும்பு இருப்பதற்கு மற்றொரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. பாண்டிய மன்னனால் தன் கணவன் கோவலன் கொலையுண்ட பிறகு கண்ணகி கடுஞ்சினம் கொண்டு மதுரையை எரித்தும் சினம் தணியாதவளாக, வடமேற்குத் திசை நோக்கி வந்தாள்.

அவள் இத்தலத்தின் அருகே வந்தபோது, அவளது கோபத்தைத் தணிக்க இங்கு கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் கையில் கரும்பைக் கொடுத்தனராம். கரும்பு ஏந்திய முருகனைக் கண்டதும் கண்ணகி சினம் தணிந்து மகிழ்ச்சி கொண்டாளாம். இவ்வூருக்கு அருகிலேயே மதுரகாளியாக (வடமொழியில் மதுரம் எனில் இனிப்பு என்று பொருள்) சிறுவாச்சூர் என்ற இடத்தில் கோயில் கொண்டாளாம். இப்போதும் இத்தலத்தில் விசேஷ நாட்களில்  காளி மூலவர் கைகளில் கரும்பு கொடுக்கப்படுகிறது. திருச்சி- பெரம்பலூர் சாலையில் சுமார் 44 கி.மீ தூரத்திலுள்ளது ஆலத்தூர். அங்கிருந்து பிரிந்து உள்ளே செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ தூரம் பயணித்தால் இத்தலத்தை அடையலாம். ஆலத்தூரிலிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

Related Stories: