கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம், ‘லக்கி பாஸ்கர்’. வசூலிலும் சாதனை படைத்த இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கினார். துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்தார். தொடர்ந்து தோல்விப் படங்களை அளித்த துல்கர் சல்மானுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ஹன்சல் மேத்தா, தனது இயக்கத்தில் வெளியான ‘ஸ்கேம் 1992’ என்ற தொடரின் கதைதான் ‘லக்கி பாஸ்கர்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் இயக்கிய ‘ஸ்கேம் 1992’ என்ற வெப்தொடரின் பெரும் பகுதியை, தயாரிப்பாளர் நாகவம்சி ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் பயன்படுத்தியுள்ளார். ‘ஸ்கேம் 1992’ போன்ற ஒரு இந்தி தொடரை பிற மொழிகளில் பார்க்க சந்தோஷமாகத்தான் இருக்கிறது’ என்றார். ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த துல்கர் சல்மான், வறுமை காரணமாக பங்குச்சந்தை மோசடியில் ஈடுபடுகிறார். இறுதியில் கார், வீடு என்று பெரிய கோடீஸ்வரராக மாறுகிறார். அதுபோல், ஹன்சல் மேத்தா இயக்கத்தில் பங்குச்சந்தை ஊழலை மையப்படுத்தி ‘ஸ்கேம் 1992’ வெப்தொடர் உருவாகியிருந்தது.