ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 12ம் நாளான நேற்று இரவு சுவாமிஅம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 5 மணிக்கு ஸபடிகலிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதியில் கால பூஜைகள் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு பர்வதவர்த்தினி அம்பாள், ராமநாதசுவாமி பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் தெற்குகோபுரம் அருகில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

Advertising
Advertising

பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7.55க்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, உலக நன்மைக்காகவும், மழைபெய்ய வேண்டியும் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. குருக்கள் விஜயகுமார் போகில், உதயகுமார், கோயில் சர்வசாதகம் சிவமணி ஆகியோர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தனர். பின் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு மஞ்சள்கயிறு மாங்கல்யபிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் தக்கார் குமரன்சேதுபதி, இணை கமிஷனர் மங்கையர்கரசி, உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகணன், கோயில் பேஷ்கார்கள் அண்ணாதுரை, கண்ணன், கலைச்செல்வன், செல்லம், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், செயலாளர் காளிதாஸ் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: