டெல்லியில் தமிழ் அகாடமி உருவாக்கம் : முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஸ் சிசோடியா ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!!

புதுடெல்லி:டெல்லியில் தமிழ் அகாடமி உருவாக்கிய ஆளும் ஆம்ஆத்மி அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளனர். டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்ப தமிழ் அகாடமியை உருவாக்கியும், அதற்கு துணைத் தலைவராக தமிழ் சங்க உறுப்பினரை நியமித்தும் டெல்லி அரசு உத்தரவிட்டிருப்பதாக அம்மாநில துணை முதல்வர் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லி துணை முதல்வரும், கலை, கலாசார மொழித்துறையின் அமைச்சருமான மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லியில் தமிழ் மொழி, கலாசாரத்தைப் பரப்பும் வகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பேரில், தமிழ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகாடமியின் தலைவராக டெல்லி தமிழ்சங்கத்தின் உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான என்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ் அகாடமிக்கான தனி இடம், அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும். டெல்லியில் வாழும் தமிழ் மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்க உள்ளோம். இந்த அகாடமி மூலம், தமிழ் மொழி, கலை, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்படுவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். தமிழ் மக்களின் கலாசாரத்தை போற்றும் வகையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படும். தமிழ்மொழியை பரப்பவும் தேவையான உதவிகள் வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழார்வலர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். டெல்லி அரசின் இந்த அறிவிப்பு குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்தியத் தலைநகரில் தமிழ் மொழிக்கு அகாடமி நிறுவியிருக்கும் டெல்லி அரசைப் பாராட்டுகிறேன். முதல்வர் கெஜ்ரிவால், துணைமுதல்வர் மணீஷ்சிசோடியா இருவருக்கும் தமிழ் உணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றேன். தலைநகரில் பறக்கும் தமிழ்க் கொடிக்குத் தலைவணங்குகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.இதே போல்,கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவில்,’டெல்லி மாநில அரசு தமிழ் அகாடமி அமைத்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். பரஸ்பர கலாச்சாரத் தொடர்புகளை வளர்க்கவும், தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தவும் இது உதவும். இதனை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் திரு. மணீஸ் சிசோடியா ஆகியோருக்கு தி.மு.கழகத்தின் சார்பில் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்,’ எனத் தெரிவித்துள்ளார். …

The post டெல்லியில் தமிழ் அகாடமி உருவாக்கம் : முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஸ் சிசோடியா ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!! appeared first on Dinakaran.

Related Stories: