பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

சின்னாளபட்டி: அம்பாத்துரை பத்ரகாளியம்மன், மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் பத்ரகாளியம்மன் உள்ளது. பாண்டிய மன்னரான கூன்பாண்டியர் என்ற சவுந்தரபாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த இந்த கோயிலில், ஆண்டுதோறும் அம்மன் வழிபாடு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8ம் தேதி அசுவ வாகனத்தில் அம்மனை அழைத்து வந்தனர். பின்னர் ஜமீன்தார் ஹரிகிருஷ்ண மாக்காள நாயக்கரை மேளதாளம் முழங்க கோயிலுக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து 9ம் தேதி மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழா முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று காலை 6 மணியளவில் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, கோயிலிலிருந்து ஊர்வலமாக வந்த பக்தர்கள் அரண்மனைக்கு வந்து வழிபாடு செய்த பின் பால்குடங்களுடன் கோயிலுக்கு வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் அண்ணாதுரை, ஜமீன்தார் ஹரிகிருஷ்ணசாமி மாக்காளநாயக்கர் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு அம்பாத்துரை கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது….

The post பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Related Stories: