புதுடெல்லி: பாஜக முன்னாள் அமைச்சர் விஜய் கோயலின் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்றது குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான விஜய் கோயல், நேற்றிரவு தர்யாகஞ்ச் பகுதி வழியாக தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை ஜாமா மஸ்ஜித் மெட்ரோ ஸ்டேஷன் கேட் அருகே மர்மநபர் ஒருவர் வழிமறித்தார். உடனே கார் நிறுத்தப்பட்டது. அப்போது விஜய் கோயலின் செல்போனை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பினார். அதிர்ச்சியடைந்த பாதுகாவலர், காரை வழிமறித்த நபரை பிடிக்க முயன்ற போது, அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காரை வழிமறித்த நபர் யார் என்ற விபரம் தெரியாத நிலையில், இவ்விவகாரம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வடக்கு டெல்லி போலீஸ் டிசிபி சாகர் சிங் கல்சி கூறுகையில், ‘திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் பாஜக தலைவர் விஜய் கோயல், தனது பாதுகாவலருடன் தர்யாகஞ்ச் பகுதியில் இருந்து செங்கோட்டை நோக்கி சுபாஷ் மார்க் வழியாக தனது காரில் பயணம் செய்தார்.அப்போது விஜய் கோயல் தனது காரின் கண்ணாடியை கீழே இறக்கினார்; ஜமா மஸ்ஜித்தின் கேட் எண்: 4-க்கு அருகே கார் ெசன்ற போது, திடீரென்று காரை வழிமறித்த ஒரு நபர், விஜய் கோயலின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த அவரது பாதுகாவலர் சத்யவீர், அந்த நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். காவல்துறைக்கு போன் செய்து புகார் செய்யப்பட்டது. அதையடுத்து ஐபிசி பிரிவு 356 மற்றும் 379 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம்’ என்றார்….
The post பாஜக மாஜி அமைச்சரின் செல்போன் பறிப்பு: காரை வழிமறித்து மர்ம நபர் கைவரிசை appeared first on Dinakaran.