ரூ.18.25 கோடி மோசடி கரூரை சேர்ந்தவர் கைது: சிபிஐ அதிரடி

கரூர்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.18.25 கோடி மோசடி செய்து கரூரில் பதுங்கி இருந்த ஒருவரை சிபிஐ கைது செய்தது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(49). இவர், கோவை மற்றும் பெங்களூரில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேரை பங்குதாரர்களாக கொண்டு 2010ல் பைனான்ஸ் நிறுவனத்தை துவங்கினார். நிறுவனத்தில் ரூ.10,000 முதலீடு செய்பவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 33 மாதங்களுக்கு 12 சதவீத வட்டி வழங்கப்படும் என ஆசைவார்த்தை கூறியதால், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பலர் லட்சக்கணக்கான ரூபாயை முதலீடு செய்தனர்.

ஆனால், வட்டி மற்றும் முதலீடு திரும்ப அளிக்கப்படவில்லை. இதுகுறித்து ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜாபட் மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அடிப்படையில் ரூ.18.25 கோடி மோசடி செய்ததாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிந்து, நிதி நிறுவனத்தை சேர்ந்த சீனிவாசன், குணசேகரன், முருகவேல், ஜீனே ஆகிய 4 பேரை கடந்த 2016ல் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிவக்குமாரை சிபிஐ அதிகாரிகள் தேடி வந்தனர். இந்நிலையில், கரூர் மாவட்டம் தாந்தோணிமலை அடுத்துள்ள கணபதிபாளையம் பகுதியில் பதுங்கியிருந்த சிவக்குமாரை, ஒடிசா சிபிஐ இன்ஸ்பெக்டர் சனடன்தாஸ் உட்பட 4 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை கரூர் வந்து கைது செய்தனர். பின்னர் முதன்மை குற்றவியல் நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிவக்குமாரை புவனேஸ்வர் அழைத்துச் சென்றனர்.

 

The post ரூ.18.25 கோடி மோசடி கரூரை சேர்ந்தவர் கைது: சிபிஐ அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: