பண்ணாரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை; பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

சத்தியமங்கலம், ஆக. 4: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. பண்டிகை தினத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

பக்தர்கள் வருகை அதிகரித்ததால் சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக வரிசைகள் ஏற்படுத்தப்பட்டது. பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன நுழைவு வாயில்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். மேலும், கோயில் முன்பு உள்ள குண்டத்திற்கு உப்பு மிளகு தூவியும், நெய் தீபம் ஏற்றியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

The post பண்ணாரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை; பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் appeared first on Dinakaran.

Related Stories: