பெரம்பலூரில் கிராமிய கலைப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை: கலெக்டர் தகவல்

 

பெரம்பலூர், ஆக.2: பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத்துறை சார்பில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சி வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின், கலை பண் பாட்டுத்துறையின் சார்பில் பகுதிநேர கிராமிய கலை பயிற்சிவகுப்புகள் இன்று (ஆக.2) முதல் தொடங்கவுள்ளது.

இந்தப் பயிற்சிக்கு 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த கிராமிய கலை பயிற்சியில் கரகாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாரத்தில் 2 நாட்கள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்திலேயே வகுப்புகள் நடைபெறும். இக்கலை பயிற்சி ஓராண்டு கால சான்றிதழ் பயிற்சியாகும்.

ஓராண்டின் முடிவில் தேர்வு நடத்தப்பட்டு, பல்கலைகழக சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தேவையான அடிப்படை கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்றால் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படும். ஆனால் தேர்வுக்கு செல்ல முடியாது. வயதுவரம்பு 17வயதுக்கு மேல் அனைவரும் சேர்ந்து பயிற்சி பெறலாம்.

ஓராண்டு பயிற்சிக்கான கல்விக் கட்டணம் ரூ.500 மட்டுமே செலுத்த வேண்டும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர், ஒருங்கிணைப்பாளர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதனகோபாலபுரம், 4-வது குறுக்குத்தெரு, பெரம்பலூர்- என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04328-275466 என்றத் தொலைப்பேசி எண் மற்றும் 9994036371 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்டக் கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

 

The post பெரம்பலூரில் கிராமிய கலைப்பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: