தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் மக்களவையில் சி.என்.அண்ணாதுரை எம்பி பேச்சு ரூ.90 லட்சம் ஜிஎஸ்டி வழியாக பிடித்தம் செய்வது நியாயமா?

திருவண்ணாமலை, ஆக 2: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும் என மக்களவையில் எம்பி சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என். அண்ணாதுரை பேசியதாவது: நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அதில், 4 கோடி மட்டுமே வளர்ச்சி பணிகளுக்காக தேர்வு செய்யப்படுகிறது. ரூ.10 லட்சம் நிர்வாக செலவுக்காக ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.90 லட்சம் ஜிஎஸ்டி வரி என்கிற பெயரில் ஒன்றிய அரசே திரும்பப் பெற்றுக் கொள்கிறது. ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 20 லட்சம் மக்கள் உள்ளனர். எனவே, ரூ.4 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியில் எந்த அளவுக்கு வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முடியும் என்று தெரியவில்லை. மேலும், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படும். ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக தொகுதி மேம்பாட்டு நிதி உயர்த்தப்படவில்லை. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி கூடுதலாக வழங்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யாமல் அதையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் மக்களவையில் சி.என்.அண்ணாதுரை எம்பி பேச்சு ரூ.90 லட்சம் ஜிஎஸ்டி வழியாக பிடித்தம் செய்வது நியாயமா? appeared first on Dinakaran.

Related Stories: