அடுத்தடுத்து 4 வீடுகளில் நகைகள், பணம் திருட்டு மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை செய்யாறு அருகே துணிகரம்

செய்யாறு, டிச.22: செய்யாறு அருகே அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டு உடைத்து நகைகள், பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் பகுதியில் உள்ள ரோட்டுத்தெருவில் நேற்று காலை சென்றவர்கள், அடுத்தடுத்து சுமார் 4 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், அனக்காவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சென்று விசாரணை நடத்தியதில், கதவு உடைக்கப்பட்ட 4 வீடுகளில் 2 வயதான மூதாட்டிகள் வீட்டை பூட்டிக்கொண்டு சென்னைக்கு சென்றிருப்பதும், மற்ற 2 வீடுகளில் ஒருவர் வேலூர் மருத்துவமனைக்கும், மற்றொருவர் வேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருப்பதும் தெரியவந்தது. ஆள் இல்லாத வீடுகளில் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து வெளியே சென்ற வீட்டின் உரிமையாளர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பிய நிலையில், நகைகள், பணம் திருடப்பட்டது உறுதியானது. ஆனால் எவ்வளவு நகை, பணம் என இன்னும் கணக்கிடப்படவில்லை.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டு போன பகுதியில் ஏதேனும் கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 4 வீடுகளில் பூட்டு உடைத்து நகைகள், பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: