தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு விவகாரம் ஆறாவது இடத்தில் தோண்டிய போது 12 எலும்புகள் கண்டெடுப்பு: எஸ்ஐடி அதிகாரிகள் முன்னிலையில் மீட்பு

பெங்களூரு: தர்மஸ்தலாவில் நேத்ராவதி ஆற்றை ஒட்டிய வனப்பகுதியில் சடலங்கள் புதைக்கப்பட்டதாக குறிக்கப்பட்ட 13 இடங்களில், முதல் 5 இடங்களில் ஒரேயொரு மண்டை ஓடு மட்டுமே கிடைத்த நிலையில், 6வது இடத்தில் 12 எலும்புகள் கிடைத்தன. கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாக முன்னாள் தூய்மைப் பணியாளர் கொடுத்த புகாரை விசாரிக்க மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று விசாரணையைத் தொடங்கிய எஸ்.ஐ.டி, கடந்த 2 நாட்களாக புகார்தாரர் அடையாளம் காட்டிய இடங்களைத் தோண்டி சடலங்களை தேடிவருகிறது. மொத்தமாக 13 இடங்கள் குறிக்கப்பட்ட நிலையில், முதல் 5 இடங்கள் தோண்டப்பட்டதில் ஒரேயொரு மண்டை ஓடு மட்டுமே கிடைத்தது.

நேற்று தோண்டப்பட்ட 6வது இடத்தில் 12 எலும்புகள் கிடைத்தன. ஒரே சடலத்தின் கைகள், கால்கள் என தனித்தனியாக 12 எலும்புகள் கிடைத்துள்ளன. அந்த எலும்புகள் தடயவியல் சோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சடலங்கள் புதைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், எலும்புகளாக மட்டுமே கிடைக்கும் என்பதால், எலும்பை வைத்து ஆணா, பெண்ணா என்பதையும் வயதையும் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டறிவது கடினமே என்று எஸ்.ஐ.டி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அடுத்து தோண்டப்போகும் 7 இடங்களிலும் கண்டிப்பாக நிறைய சடலங்களின் எலும்புகள் கிடைக்கும் என்று புகார்தாரர் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக 9வது இடத்திலிருந்து ஏராளமான எலும்புக்கூடுகள் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

* காணாமல் போனவர்கள் குறித்து தகவல் சேகரிப்பு
தர்மஸ்தலாவில் புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுவரும் நிலையில், தர்மஸ்தலா உட்பட பெல்தங்கடி தாலுகாவில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 20 ஆண்டுகளில் பதிவான காணாமல் போனவர்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. அந்தப் புகார்களின் அடிப்படையில், தோண்டி எடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் அடையாளங்களைக் கண்டறிய எஸ்.ஐ.டி முனைந்துள்ளது. தோண்டி எடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தடயவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. தடயவியல் ஆய்வறிக்கை மற்றும் பதிவான வழக்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்படும்.

The post தர்மஸ்தலாவில் சடலங்கள் புதைப்பு விவகாரம் ஆறாவது இடத்தில் தோண்டிய போது 12 எலும்புகள் கண்டெடுப்பு: எஸ்ஐடி அதிகாரிகள் முன்னிலையில் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: