அனுமதியின்றி கிளீனர் இயக்கிய சரக்கு வாகனம் மோதியதில் உடல் நசுங்கி இருவர் பலி: வீடியோ வைரல்

புழல்: கூரியர் நிறுவனத்தில் கிளீனர் இயக்கிய சரக்கு வாகனகம் மோதி காவலாளி, ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சோழவரம் அடுத்த ஒரக்காடு கிராமத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள, தனியாருக்கு சொந்தமான கூரியர் நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் மாலை சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. அப்போது, சரக்கு வாகனத்தை கேட் முன் நிறுத்திவிட்டு, அதன் ஓட்டுநர் கீழே இறங்கி காவலாளியிடம் அனுமதி கேட்டுள்ளார். காவலாளி, கேட்டை திறந்து ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, சரக்கு வாகனத்தில் வந்த கிளீனர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து திடீரென வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் எதிரே நின்று கொண்டிருந்த காவலாளி, ஓட்டுநர் ஆகிய 2 பேர் மீது மோதி சுவரில் இடித்து நின்றது.

இதில் காவலாளி மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த சோழவரம் போலீசார், 2 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், உயிரிழந்தவர்கள் ஒரக்காடு அல்லி நகர் கிராமத்தை சேர்ந்த காவலாளி பிரபு (50), தென்காசியை சேர்ந்த ஓட்டுநர் கருப்பசாமி (23) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய பழைய எருமைவெட்டி பாளையத்தை சேர்ந்த கிளீனர் ரூபனை (18) போலீசார் கைது செய்தனர். கிளீனர் வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் காவலாளி பிரபு இறப்புக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் கம்பெனியை முற்றுகையிட்டனர். இதையடுத்து சோழவரம் போலீசார் மற்றும் கம்பெனி நிர்வாகத்தினர் சமரசம் பேசி உரிய இழப்பீடு வழங்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

The post அனுமதியின்றி கிளீனர் இயக்கிய சரக்கு வாகனம் மோதியதில் உடல் நசுங்கி இருவர் பலி: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: