ஆலம்பரையில் நாணய சாலை இருந்தது. இங்கு ஆலம்பரை காசு, ஆலம்பரை வராகன் ஆகிய நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. கி.பி.1760ல் பிரெஞ்சு படையை வெற்றி கொண்ட ஆங்கிலேய படை, இக்கோட்டையை கைப்பற்றி சிதைத்தது. கோட்டையின் எஞ்சிய பகுதி தற்போது வரலாற்று சின்னமாக காட்சி அளிக்கிறது.மேலும், இயற்கை சீற்றங்களால் கோட்டை மதில் சுவர்கள் சிதிலமடைந்தன. இக்கோட்டையை சுற்றிபார்க்க வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். சினிமா மற்றும் சின்னத்திரை நாடகங்களின் படப்பிடிப்புகளும் அடிக்கடி இங்கு நடைபெற்று வந்தது. வரலாற்று பெருமை பெற்ற இந்த கோட்டை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
தற்போது, ஆலம்பரை கோட்டை பராமரிப்பில்லாமல் நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது. சுற்றுலா தளமாக மாறியுள்ள இந்த கோட்டையை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு இங்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படவில்லை. மேலும், இளைப்பாற நிழற்குடையோ, கட்டடங்களோ இங்கு கிடையாது.இது ஒருபுறமிருக்க இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பும் குறைவாகவே உள்ளது. இக்கோட்டையை சீரமைத்து பாதுகாப்பதுடன் சுற்றுலா பயணியை கவரும் வகையில் பொழுதுபோக்கு மையங்கள், பூங்காக்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பரில் செங்கல்பட்டு முன்னாள் கலெக்டர் இக்கோட்டையை நேரில் பார்வையிட்டதோடு மாடலிங், அவுட்டோர் போன்ற புகைப்படங்கள் எடுக்கும் இடமாக கோட்டை பகுதியை மாற்றி, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆனால், ஆலம்பரைக்கோட்டையை மேம்படுத்துவது குறித்து தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தற்போது உள்ள மாவட்ட கலெக்டர் இக்கோட்டையை மேம்படுத்தி வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கடந்த இரண்டு ஆண்டு முன்பு வரை இக்கோட்டையில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில், அதன்மூலம் வரும் வருமானத்தை பெருவதில் இருத்தரப்பினருக்குமிடையே தகராறு மூண்டது. இதனால், இப்பகுதியில் பதற்றம் நிலவியதால் சினிமா படப்பிடிப்புகளுக்கு காவல்துறை தடை விதித்தது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டு கோட்டையை மேம்படுத்தினால் பேரூராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து இக்கோட்டைக்கு செல்லும் சாலை 3 கிலோ மீட்டர் தொலைவு கொண்டதாகும். இந்த சாலை குறுகி உள்ளதாலும், சாலையில் இருபுறமும் கடைகள் ஆக்கிரமிப்பாலும் சுற்றுலா பயணிகள் கோட்டைக்கு வந்து செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடப்பாக்கம் பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஆலம்பரைக்கோட்டை: கண்டுகொள்ளாத தொல்லியல் துறை சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
