திருக்கழுக்குன்றம், டிச.25: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகாவிடம், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: திருக்கழுக்குன்றத்தில் இயங்கி வரும் வட்டார வள மையத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு பயிற்றுனராக பணிபுரிந்து வருகிறேன். நான் பணியில் இருக்கும்போது என்னுடன் பணிபுரியும் சிலரின் தூண்டுதலின்பேரில், அரசு அலுவலகத்தில் நுழைந்து என்னை ஜாதி பெயர் சொல்லி சிலர் அசிங்கமாக பேசி, அடித்து துன்புறுத்தினர். இதேபோல், கடந்த 5ம் தேதி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, ஏற்கெனவே இங்கு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த மகேஷ் என்பவரின் மனைவி நளினி மற்றும் அவரது மகள் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்து, என்னுடன் பணிபுரியும் ஜான்சன் மற்றும் கோமதி ஆகியோருடன் பல மணி நேரம் பேசிவிட்டு, அதன் பிறகு என்னிடம் வந்து என் ஜாதி பெயரை சொல்லி திட்டியவாரே என்னை அடித்து துன்புறுத்தினர்.
இது சம்பந்தமாக நான் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அங்கு வந்த என் அலுவலகத்தைச் சேர்ந்த ஜான்சன் மற்றும் கோமதி ஆகியோர் புகாரை வாபஸ் பெறச்சொல்லி மிரட்டியதால் புகாரை வாபஸ் வாங்கி விட்டேன். இத்துடன் எந்த பிரச்சனையும் இருக்காது என்று இருந்த நிலையில், திடீரென என்னை அச்சிறுப்பாக்கத்திற்கு மாற்றம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். தனி நபர்கள் அத்துமீறி நான் பணிபுரியும் அரசு அலுவலத்தில் நுழைந்து, என்னை சாதி பெயரை சொல்லி அடித்தது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய நபர்கள் மற்றும் அதற்கு உடைந்தையாக இருந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்து, எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
