காஞ்சிபுரம், டிச.20: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களில், அனுமன் ஜெய்ந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்து முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் பின் புறத்தில் அமைந்துள்ள 18 அடி உயர பிரசன்ன ஆஞ்சநேயர், சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் அருகே அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர், உத்திரமேரூர் அடுத்து மருதத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சுயம்பு வீர ஆஞ்சநேயர், செங்கல்பட்டு அடுத்து தேவனூர் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு எநய்குப்பி அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
அதேபோல், மாவட்டத்தின் வாலாஜாபாத், பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர் பகுதிகளில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில்களில், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழாவில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆஞ்சநேயருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தியும், நெய் அபிஷேகம் செய்தும் வழிப்பட்டனர். அப்போது, பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
