காஞ்சிபுரம், டிச.25: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரை வழங்கினார். மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு, துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். அதன்படி, நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 4 விவசாயிகளுக்கு ரூ.8.54 லட்சம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய விசை உழுவை இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். அந்ததந்த காலத்தில் செய்யக்கூடிய உழவு, விதைப்பு, களையெடுத்தல் மற்றும் நிலத்தை சாகுபடி செய்தல், பயிர்களுக்கு இடையேயான தேவையற்ற புற்களை அகற்றுவதற்கு, மண்ணை பதப்படுத்துவதற்கும், முக்கியமாக மண்ணை பதப்படுத்தி, விவசாயப் பணிகளை விரைவாகவும் எளிதாகவும் முடிப்பதற்கும், பயிருக்கு பாதிப்பும் ஏற்படாவண்ணம் களை நீக்கவும், பணிகளை விரைவாக செய்வதற்கும் விசை உழுவை இயந்திரங்கள் பயன்படுகிறது. உழுவை இயந்திரங்கள் பெற்ற விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
தொடர்ந்து, வேளாண்மை துறை மூலம் கூரம், வதியூர் மற்றும் முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 10 விவசாய பயனாளிகளுக்கு ரூ.8.52 லட்சம் மதிப்பிலான பயிர்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.5,143 மதிப்பிலான (நுண்ணூட்ட கலவை, நொச்சி, வரம்பில் உளுந்து, தெளிப்பான்) வேளாண் இடுப்பொருட்கள் என ரூ.17.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இதனையடுத்து, வனவிலங்குகளால் சேதமடைந்த கரும்பு விவசாயிகளுக்கு, பயிர் இழப்பீட்டு தொகையையும் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் யோகவிஷ்ணு, வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
