கிளப் உலக கோப்பை கால்பந்து கூடுதல் நேரத்தில் மட்டும் கோல்: துனிசை வீழ்த்திய செல்சீயா

பிலாடெல்பியா,: உலகின் முன்னணி கால்பந்து கிளப்களுக்கு இடையிலான உலக கோப்பை போட்டி அமெரிக்காவில் நடக்கிறது. அங்கு பிலாடெல்பியாவில் நடந்த டி பிரிவு ஆட்டத்தில் எஸ்பெரன்ஸ் டி துனிஸ்(துனிசியா)-செல்சீயா(இங்கிலாந்து) அணிகள் மோதின. இரு அணிகளும் இதற்கு முன் தலா 2 ஆட்டங்களில் விளையாடி இருந்தன. அவற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி, தோல்வியை பெற்று இருந்தன.

அதனால் 2வது வெற்றிக்காக 2 அணிகளும் மல்லுக் கட்டின. ஆனால் பந்து நீண்ட நேரம் செல்சீயா வீரர்கள் காலைதான் சுற்றி வந்தது. கோல் முயற்சியிலும் அவர்கள் முன்னிலையில் இருந்தனர். ஆனாலும் முதல் பாதியில் கூடுதலாக வழங்கப்பட்ட இழப்பீடு நேரத்தில்தான் செல்சீயா கோலடித்தது. துனிஸ் தவறிழைத்ததால் கிடைத்த வாய்ப்பை டோசின் அடராபியா(45+3நிமிடம்), என்சோ தட்டி தந்த பந்தை துல்லியமாக லியம் டெலப்(45+5நிமிடம்) ஆகியோர் அடுத்தடுத்து கோலடித்தனர்.

அதனால் செல்சீயா முதல் பாதி முடிவில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. தொடர்ந்து 2வது பாதியில் செல்சீயாவின் அதிக முயற்சிகளும், துனிசின் அரிதான முயிற்சிகளும் பலனளிக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில் வழங்கப்பட்ட இழப்பீடு நேரத்தில் செல்சீயாவின் பதிலி ஆட்டக்காரர் ஆந்த்ரே சான்டோஸ் கடத்தி தந்த பந்தை டைரிக் ஜார்ஜ்(90+7நிமிடம்) கோலாக்கினார். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வர செல்சீயா 3-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது.

The post கிளப் உலக கோப்பை கால்பந்து கூடுதல் நேரத்தில் மட்டும் கோல்: துனிசை வீழ்த்திய செல்சீயா appeared first on Dinakaran.

Related Stories: