மினி பஸ் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஏறத்தாழ 1கோடி பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மினி பஸ் திட்டத்திற்கு பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் 3,103 வழித்தடங்களில் உள்ள இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கினார்கள். இந்தியாவில் பேருந்து வசதிகளில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் பெருமை அதன் மூலம் ஏற்பட்டது.

பேருந்து வசதிகள் கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்கத்தக்க வகையில் மினி பஸ் திட்டம் 1997ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது. மினி பஸ் திட்டம் தொடர்பான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் 22.7.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் தொழில் சார்ந்த பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆலோசனைகள் அடிப்படையில் புதிய விரிவான மினி பஸ் திட்டம் 2024 குறித்து 23.1.2025 அன்று அறிவிக்கப்பட்டது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் மறுபடியும் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, 28.4.2025 அன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 25 கி.மீ. தூரத்திற்கு மினி பஸ் இயக்கப்படும் என்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பொதுமக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிலோ மீட்டர் தூரம் வரை மினி பஸ்களை இயக்கிடவும் வழிவகை செய்யப்பட்டது. இதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை 16.6.2025 அன்று தஞ்சாவூரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள். இதுவரை, பேருந்துகளை தங்கள் கிராமத்தில் காணாத பொதுமக்கள் எல்லாம் கண்டு மகிழ்ந்து பரவசம் அடையும் வகையில் மினி பேருந்துகள் கிராமப்புறங்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்த மினி பஸ் தங்களுடைய கிராமத்திற்கு வந்ததும் மூதாட்டி ஒருவர் தரையில் விழுந்து தலைவணங்கி பேருந்தை வரவேற்றார். வேறு சிலர் பேருந்து வந்த வழித்தடத்தில் கற்பூரம் ஏற்றி மகிழ்ந்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

திருத்தணியிலிருந்து தும்பிக்குளத்திற்குப் புதிதாக இயக்கப்பட்ட மினி பஸ்ஸில் பயணம் செய்த ஒரு பெண், “நான் தும்பிக்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். விவசாயக் கூலி தொழிலாளியான நான், நாள்தோறும் வேலைக்குச் செல்லும்போது பஸ் வசதி இல்லாததால், நடந்தே வேலைக்குச் சென்று அவதிப்பட்டு வந்தேன். தற்போது மினி பஸ் சேவை தொடங்கியிருப்பதால், இதில், பாதுகாப்பாக வேலைக்குச் சென்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் கிராமத்திற்கு மினி பஸ் திட்டத்தைச் செயல்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பவானி என்னும் மாணவி தெரிவிக்கையில் “திருத்தணியில் மேல்நிலைப் பள்ளியில் +2 படிக்கிறேன். நான் பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால், நாள்தோறும் பள்ளிக்குச் செல்வதற்குச் சிரமம் ஏற்பட்டது. தற்போது எங்கள் ஊருக்கு மினி பஸ் வருவதால், நான் பள்ளி செல்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்திலிருந்து நெல்லிக்குப்பம் வரை செல்லும் மினி பஸ்ஸில் பயணம் செய்த கன்னிவாக்கத்தைச் சேர்ந்த வரதராஜன், “எங்கள் ஊருக்கு போக்குவரத்து வசதி கிடையாது. நாங்கள் இரு சக்கர வாகனங்களிலோ, ஆட்டோ பிடித்தோ அதிக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இதுவரை இருந்தோம். தற்போது எங்கள் கிராமத்திற்கு மினி பஸ் வருவதால், எங்கள் சிரமம் குறைந்து, செலவினம் குறைந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இத்திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ள இந்த மினி பஸ் திட்டத்தால், இவர்களைப் போல ஏறத்தாழ 1 கோடி மக்கள் மினி பஸ்ஸில் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மினி பஸ் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஏறத்தாழ 1கோடி பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு!! appeared first on Dinakaran.

Related Stories: