புதுச்சேரி, மே 17: புதுச்சேரி வேளாண்துறை செயலர் நெடுஞ்செழியன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் சேமசேகர் அப்பாராவ் கோட்டாரு, சீனியர் எஸ்பி நாரா சைதன்யா ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், மற்ற யூனியன் பிரதேசங்களில் இருந்து புதுச்சேரிக்கு 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பணியாற்றி வரும் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, புதுச்சேரியில் வேளாண், கால்நடை பராமரிப்பு, கலை பண்பாடு, இந்து அறநிலையத்துறை, வக்பு, ரயில்வே திட்டம் உள்ளிட்ட துறைகளின் செயலராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி நெடுஞ்செழியன் டெல்லிக்கும், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி சேமசேகர் அப்பாராவ் கோட்டாரு லட்ச தீவுகளுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு சீனியர் எஸ்பியாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி நாரா சைதன்யா டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், டெல்லியில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ண மோகன் உப்பு, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக ரவி பிரகாசம், ஸ்மிதா, ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சவுத்ரி முகமது யாசின், லட்ச தீவுகளில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி விக்ராந்த் ராஜா ஆகிய 5 பேரும் புதுச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவிபிரகாசம், ஸ்மிதா, விக்ராந்த் ராஜா ஆகியோர் ஏற்கனவே புதுச்சேரியில் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கே.லால், டெல்லியில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி நித்யா ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் புதுச்சேரிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங் பிறப்பித்துள்ளார்.
The post வேளாண் செயலர், காரைக்கால் ஆட்சியர் இடமாற்றம் புதுச்சேரிக்கு 5 ஐஏஎஸ் அதிகாரி, 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.
