2வது நாளாக மக்களுடன் முதல்வர் 3ம் கட்ட முகாம்: ரூ.3.23 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மே 16: அரியலூர் மாவட்டத்தில் 2வது நாளாக மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர்கள் 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தெம்மானம், ஓட்டக்கோவில், பொய்யாதநல்லூர், வெள்ளூர், ராயம்புரம் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், சி.வி.கணேசன் தொடங்கி வைத்து 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பிலான பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும் நேற்றைய தினம் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையில் பொதுமக்களிடமிருந்து 1074 மனுக்கள் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 5 மணி வரையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் முகாமினை சிறப்பு கவனம் கொண்டு நடத்திடும் வகையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை நியமித்து அனுப்பியுள்ளார். மேலும், கடந்த மாதங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம்களில் கலந்துகொண்டு மனுக்களை பெற்று அதற்கு தீர்வு கண்டுள்ளார். அதேபோன்று நேற்று முன் தினம் அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர், அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்களில் நடைபெற்ற முகாம்களில் கலந்துகொண்டு மக்களிடமிருந்து மனுக்களை பெறப்பட்டு விரைவில் தீர்வு காணப்படவுள்ளது.

நேற்றைய தினம் அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாலாஜாநகரம், ஓட்டக்கோவில், இலுப்பையூர், பொட்டவெளி மற்றும் ராயம்புரம் வரை நடைபெறும் முகாம்களில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுள்ளார்.
இம்மனுக்களின் மீது தொடர்புடைய அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண உள்ளனர். ஒரு அரசு மக்களுடைய தேவையினை கேட்டறிந்து அதனை பூர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் குறிக்கோளாகும். அரசுத் திட்டங்களின் பலன்கள் பொதுமக்களை நேரடியாக சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டத்தினை செயல்படுத்தி தொகை மகளிர் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.16 கோடி மகளிர் பயன்பெறுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்

அதனை தொடர்ந்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில்;
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தகைய மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறுகிறது. அரசின் அனைத்து துறை அலுவலர்களும் மக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெறுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில் இம்முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வருவாய் துறையின் வட்டாட்சியர் அலுவலகம் வாயிலாக மூலம் வழங்கப்படும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை சான்று மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் தொடர்பான மனுக்களை பெற்று அந்த மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படவுள்ளது இவ்வாறு அவர் கூறினார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பொ.ரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post 2வது நாளாக மக்களுடன் முதல்வர் 3ம் கட்ட முகாம்: ரூ.3.23 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.

Related Stories: