பருவநிலை மாற்றத்தால் மா சாகுபடி பாதிப்பு

தேனி, மே 14: பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கும்பக்கரை, செலும்பு, முருகமலை, சோத்துப்பாறை, மஞ்சளாறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மாம்பழம் விவசாயம் நடந்து வருகிறது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரிக்கு அடுத்தபடியாக 2ம் இடத்தில் பெரியகுளம் உள்ளது. இப்பகுதியில் அல்போன்சா, பங்கனபள்ளி, காலாபாடி, இமாம்பசந்த், செந்தூரம், காசா லட்டு, கல்லாமை போன்ற ரகங்கள் விளைகின்றன. பொதுவாக டிசம்பர் இறுதியில் இருந்து ஜனவரி இறுதிக்குள் மாமரங்களில் பூக்கள் பூப்பது வழக்கம். ஆனால் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு ஜனவரி வரை நீடித்ததால், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படாததால், மாம் பூக்கள் பூப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவிட்டு மருந்து தெளித்தும் மாம் பூக்கள் சரிவர பூக்கவில்லை. இந்நிலையில் மா மரங்களில் இளம் தளிர்கள் வர தொடங்கியுள்ளதால், இப்பகுதியில் இந்தாண்டு மா விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படலாம் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து மா விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘பருவநிலை மாற்றத்தால் இந்தாண்டு மா விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post பருவநிலை மாற்றத்தால் மா சாகுபடி பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: