சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ கடனுதவி திட்டங்கள்

அரியலூர் மே 13: அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் பொ.ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் மற்றும் வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமம், நகர்ப்புறங்களில் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். திட்டம் 2-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம், கிராமம், நகர்ப்புறங்களில் ரூ.8,00,000 வரை இருக்க வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்டுக்கு 8 சதவீத பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில், அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 மும் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதமும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 லட்சம் வழங்கப்படுகிறது.

மேலும், சிறுபான்மையின மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம்-1 ன் கீழ் ரூ.20,00,000ம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதமும், மாணவியருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள், கருவிகள், இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ கடனுதவி திட்டங்கள் appeared first on Dinakaran.

Related Stories: